For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியார் ஐ.டி.ஐக்களில் ஏழை மாணவர்களுக்கு 50% இடம்: ஜெயலலிதா

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 627 தனியார் ஐ.டி.ஐகளில் 50 சதவீத இடங்களில் அரசு சார்பில் கலந்தாய்வு மூலம் ஏழை மாணவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரம் முடிந்தும் விதி எண் 110ன் கீழ் ஜெயலலிதா வாசித்த அறிக்கையில்,

பொருளாதாரத்தில் ஒரு நாடு சிறந்து விளங்க வேண்டுமெனில், ஏட்டுக்கல்வியுடன் தொழில் கல்வியும் வளர்ச்சி பெற வேண்டியது இன்றியமையாதது ஆகும். இதன் அடிப்படையில், இளைய சமுதாயத்தினர் தொழில் கல்வியில் வளர்ச்சி பெற தேவையான நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு எடுத்து வருகிறது. அதன் காரணமாக, தொழில்நுட்பத் தகுதி பெற்றுள்ள மாணவ-மாணவியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள 62 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம், சுமார் 21,000 மாணவ-மாணவியருக்கு கட்டணம் எதுவும் இன்றி பயிற்சி அளிக்கப்படுகிறது. தகுதி பெற்ற அனைத்து மாணவ-மாணவியருக்கும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் மூலம் பயிற்சி அளிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. அதே சமயத்தில், தமிழ்நாட்டில் உள்ள 627 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் 60,320 மாணவ, மாணவியருக்கு பயிற்சி அளிக்க முடியும்.

ஊரகப்பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் 20 ஆயிரம் ரூபாய் முதல் 25 ஆயிரம் ரூபாய் வரையிலும், நகரப்பகுதிகளில் உள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரையிலும் பயிற்சி கட்டணமாக வசூலிக்கின்றன. இந்த பயிற்சி கட்டணத்தை ஏழ்மை நிலையில் உள்ள படித்த இளைஞர்களால் கட்ட முடியாததால், தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 விழுக்காட்டிற்கு மேல் இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.

தொழில் சார்ந்த திறன் பயிற்சி மற்றும் அறிவு சார் திறன் பயிற்சி பெற்ற மனித வளத்தை உருவாக்குவது, தமிழ்நாட்டின் தொலைநோக்கு திட்டம்-2023ன் வெற்றிக்கு ஆதாரமாக அமையும்.

வரும் 11 ஆண்டுகளில், 2 கோடி நபர்களை வேலைவாய்ப்புக்கு ஏற்ற பயிற்சி மற்றும் திறன் பெற்ற பணியாளர்களாக உருவாக்குவது தொலை நோக்கு திட்டம்-2023ன் வளர்ச்சி யுத்திகளில் ஒன்றாகும்.

இந்த சூழ்நிலையில், வேலைவாய்ப்புக்கேற்ற பயிற்சி திறனை தகுதி படைத்த மாணவ-மாணவியர் அனைவருக்கும் அளித்திடும் வகையில், அங்கீகரிக்கப்பட்ட மற்றும் தகுதியுள்ள தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் 50 விழுக்காடு இருக்கைகளை, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பின்பற்றப்படும் மாணவர் சேர்க்கை முறையை பின்பற்றி, மாவட்டந்தோறும் கலந்தாய்வு நடத்தி, அரசே நிரப்பும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதனால் திறமை இருந்தும், வசதியின்மை காரணமாக தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர இயலாத மாணவ-மாணவியர் பெரிதும் பயன்அடைவார்கள். தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் இந்த மாணவ-மாணவியர் வேலைவாய்ப்பை பெரும் வகையில் ஒரு வருட மற்றும் இரண்டு வருட படிப்புகளில் பயிற்சி அளிக்கப்படும்.

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவ-மாணவியரைப் போலவே, இத்திட்டத்தின் மூலம் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிலும் மாணவ-மாணவியரிடமிருந்து பயிற்சிக் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மாணவ-மாணவிகள், தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு செலுத்த வேண்டிய பயிற்சிக் கட்டணத்தை அரசே செலுத்தும். இதன்படி ஊரகப்பகுதிகளில் உள்ள தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களுக்கு மாணவர் ஒருவருக்கு 10,000 ரூபாய் வீதமும், நகரப்பகுதிகளில் உள்ள தனியார் பயிற்சி நிலையங்களுக்கு மாணவர் ஒருவருக்கு 12,000 ரூபாய் வீதமும் பயிற்சி கட்டணம் அரசால் செலுத்தப்படும்.

இத்திட்டத்தின் மூலம் முதலாம் ஆண்டில் சுமார் 18,000 மாணவ-மாணவியரும், பின்னர் வரும் ஆண்டுகளில் 30,000 மாணவ-மாணவியரும், வேலைவாய்ப்புக்கு ஏற்ற திறன் பயிற்சி பெறுவார்கள். இதற்கென 2012-13ம் ஆண்டில் 14 கோடியே 85 லட்சம் ரூபாயும், 2013-14ம் ஆண்டில் 26 கோடியே 40 லட்சம் ரூபாயும், 2014-15ம் ஆண்டு முதல், ஆண்டொன்றுக்கு 33 கோடி ரூபாயும் அரசுக்கு செலவு ஏற்படும்.

இதன் மூலம், தனியார் துறையில் இளைஞர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைத்து, அவர்களது பொருளாதார நிலை உயர்வதுடன், நாட்டின் தொழில் உற்பத்தித்திறனும் அதிகரிக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் ஜெயலலிதா.

English summary
Tamil Nadu government has decided to fill 50 percent of seats in private Industrial Training Institute (ITI) with its quota
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X