For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. படம் விவகாரம்: விகடனிலிருந்து விலக்கப்பட்டார் மதன்!

By Shankar
Google Oneindia Tamil News

Madhan
சென்னை: ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து முற்றாக விலக்கப்பட்டார், அதில் பல ஆண்டுகள் கார்ட்டூனிஸ்டாக, கேள்வி- பதில் பகுதி எழுதும் பொறுப்பிலிருந்த மதன்.

ஆனந்த விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவர் மதன். கார்ட்டூனிஸ்டாக நுழைந்து, எஸ் பாலசுப்பிரமணியன் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், விகடன் குழும இதழ்களின் இணை ஆசிரியராக உயர்ந்தவர் மதன்.

அந்த பத்திரிகைகளில் மதன் எழுதிய தொடர்கள், கேள்வி பதில்கள் அவரை கார்ட்டூனிஸ்டிலிருந்து எழுத்தாளராக உயர்த்தின.

ஆனால் ஒரு கட்டத்தில், விகடனுக்கு வெளியிலும் பணியாற்ற முனைந்தார் மதன். அன்றைக்கு விஜய் மல்லையா நிர்வாகத்தில் இருந்த விஜய் டிவியில் இவர் நிகழ்ச்சிகள் செய்தார். மேலும் சினிமா படங்களுக்கும் வசனம் எழுத ஆரம்பித்தார்.

இந் நிலையில் விகடன் நிர்வாகத்துக்கும் அவருக்கும் பிரச்சனை வெடிக்க, 'golden handshake' என்ற முறையில் விகடனை மதன் சுமூகமாகவே பிரிந்தார்.

ஆனாலும் மதனின் கார்ட்டூன்கள் மற்றும் கேள்வி பதில் பகுதி மட்டும் தொடர்ந்து இடம்பெறும் என விகடன் அறிவித்திருந்தது. கடந்த இதழ்வரை மதனுக்காக இந்த இரு பகுதிகளும் தொடர்ந்து இடம்பெற்று வந்தன. இவற்றுக்கு தனி வாசகர்களே உள்ளனர்.

இந்த நிலையில், 2.5.2012 விகடனில் மதன் கேள்வி பதில்கள் பகுதியில் வெளியான ஒரு புகைப்படம் விகடனிலிருந்தே மதனை வெளியேற்றியுள்ளது.

அந்தக் கேள்வியும் அதற்கு மதன் பதிலும்:

கேள்வி: உலகில் உள்ள உயிரினங்களில் ஒன்று மற்றொன்றின் காலில் விழுந்ததாக வரலாறு இல்லை. ஆனால், மனிதன் மட்டும்இதற்கு விதிவிலக்காக இருப்பது ஏன்? இதைத் தொடங்கிவைத்தது யார்?

பதில்: ஆதி மனிதன்தான். திடீர் என்று தெருவில் குண்டு வெடிக்கிறது. உடனே என்ன செய்கிறீர்கள்? தரையோடு படுத்துக்கொள்கிறீர்கள். காரணம், அதில்தான் ஆபத்து ரொம்பக் குறைவு. ஆதி மனிதனும் திடீர் என இடி இடித்தாலோ, பெரிய மின்னல் தோன்றினாலோ தனக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்கத் தரையில் நடுங்கிப் படுத்துக்கொண்டான். பிறகு, சூரியன் போன்ற இயற்கை விஷயங்களின் முன்பு 'எனக்கு எந்த ஆபத்தும் ஏற்படுத்தாதே’ என்பதை விளக்க, குப்புறப் படுத்தான். பிறகு, அரசர்கள் முன்பு, இன்று தலைவர்கள் காலடியில் ('பதவி ஏதாவது தந்து என்னைக் காப்பாற்றுங்கள்’ என்று அர்த்தம்!). விலங்குகளும் தத்தம் தலைவன் முன்பு அடிபணிகின்றன. 'நான் உனக்கு அடங்கிப்போகிறேன்!’ என்கிற ஓர் அர்த்தம்தான் அதற்கு உண்டு!

மேற்கண்ட கேள்வி- பதிலுக்குப் பொருத்தமாக, இன்றைய முதல்வர் ஜெயலலிதா காலில், ஒரு அமைச்சர் சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடும் படம் இடம்பெற்றிருந்தது.

இந்தப் படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விகடன் நிர்வாக இயக்குனருக்கு மதன் ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

அதில், "பல ஆண்டுகளாக விகடனில் நான் எழுதி வரும் 'ஹாய் மதன்’ பகுதியில் வரும் என் பதில்கள் பொது அறிவு பற்றியது என்பது தங்களுக்குத் தெரியும். ஆயிரக்கணக்கான விகடன் வாசகர்கள் - வரலாறு, விஞ்ஞானம், மருத்துவம், மனித இயல், விலங்கியல் சம்பந்தப்பட்ட கேள்விகளைத்தான் எனக்கு எழுதி அனுப்புகிறார்கள். அரசியலையும் சினிமாவையும் நான் அநேகமாகத் தொடுவதில்லை.

2.5.2012 இதழில் 'காலில் விழுந்து வணங்குவது’ பற்றிய மனித இயல் (Anthropology) பற்றிய ஒரு கேள்விக்கு, ஆதி மனிதன் எப்படி அதை ஆரம்பித்திருக்கக்கூடும் என்று விளக்கி, பொதுவான ஒரு பதில் எழுதியிருந்தேன். ஆனால், அந்தப் பதிலுக்கான படம் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் காலில் ஒருவர் விழுவது போன்ற பெரிய புகைப்படம் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது எனக்கு மிகவும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளித்தது. ஆதிகாலத்திய சம்பிரதாயம் பற்றிய பொது அறிவுப் பதில் தான் அதுவேயன்றி, குறிப்பிட்ட ஒருவரைப் பற்றிய பதிலே அல்ல அது!

ஜெயா டி.வியில் நான் சினிமா விமர்சனம் செய்துவருகிறேன். இந்நிலையில், அவர்கள் அந்தப் புகைப்படத்தை ஹாய் மதன் பகுதியில் வெளியிட்டதற்கு நான்தான் காரணமோ என்று தவறாக நினைத்துக்கொள்ள மாட்டார்களா? என்னிடம் ஜெயா டி.வியின் தலைமை அதுபற்றி விளக்கம் கேட்டால், 'அந்த புகைப்படம் வெளிவந்ததற்கு நான் காரணமல்ல’ என்று இதன் பின்னணியை விவரமாக விளக்க வேண்டி வராதா? அந்த தர்மசங்கடம் எனக்குத் தேவைதானா? முப்பதாண்டு காலம் விகடன் நிறுவனத்துக்காக உழைத்த எனக்கு இப்படியரு பிரச்னையை ஏற்படுத்துவது நேர்மையான, நியாயமான செயல்தானா என்பதை தாங்கள் சிந்திக்க வேண்டும்.

முக்கியமான பிரச்சனைகள் எத்தனையோ சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழக முதல்வரிடம் இதற்காக அப்பாயின்ட்மென்ட் கேட்டு, அவரைச் சந்தித்து, நான் செய்யாத தவறுக்கு விளக்கம் தந்து கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையை எனக்கு ஏற்படுத்துவது முறையா என்று சிந்திக்க வேண்டுகிறேன்.

...வரும் இதழிலேயே 'புகைப்படங்கள், லே- அவுட்டுக்கு மதன் பொறுப்பல்ல’ என்ற விளக்கத்தையாவது வெளியிட்டால், நியாயம் காப்பாற்றப்படும். அதை வரவிருக்கும் இதழிலேயே செய்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என்று கூறியிருந்தார் மதன் தனது கடிதத்தில்.

மதன் கேள்வி- விகடனின் அதிரடி பதில்...

இந்தக் கடிதத்துக்கு விளக்கம் அளித்து இந்த வார விகடனில் அதன் ஆசிரியர் கொடுத்துள்ள விளக்கமான பதில் இது...

மதன் நமக்கு எழுதியிருக்கும் இந்தக் கடிதம், தவிர்க்க முடியாத சில நெருக்கடிகளுக்கும் நிர்பந்தங்களுக்கும் அவர் சமீப காலமாக ஆளாகி இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

'ஹாய் மதன்' பகுதியில் வாசகர்கள் கேட்ட கேள்வியிலோ, மதன் அளித்த பதிலிலோ நேரடி வார்த்தைகளில் இடம் பெறாத- அதே சமயம், அந்தக் கேள்வி- பதிலுக்கு மேலும் வலிமையும் சுவாரஸ்யமும் சேர்க்கக்கூடிய படங்களை இதற்கு முன் ஏராளமான சந்தர்ப்பங்களில் ஆசிரியர் குழு சேர்த்துள்ளது. அப்போதெல்லாம், எந்தக் காரணங்களைக் காட்டியும் ஒருபோதும் எந்த ஆட்சேபமும் அவர் தெரிவித்ததே இல்லை.

அதேபோல், 'இது பொது அறிவுப் பகுதி மட்டுமே' என்று இப்போது மதன் குறிப்பிடும் 'ஹாய் மதன்' பகுதியில் அரசியல் மற்றும் சினிமா பற்றிய நேரடியான, காரசாரமான பதில்களை அவர் தொடர்ந்து இதழ் தவறாமல் அளித்திருப்பதை வாசகர்களும் நன்கு அறிவார்கள். இப்போது திடீரெனத் தன் நிலைப்பாட்டை அவர் மாற்றிக் கொள்வதற்கான காரணம், அவருடைய கடிதத்திலேயே உள்ளது.

நடுநிலை இல்லை...

இதையெல்லாம் பார்க்கும்போது... தற்போது அவர் இருக்கின்ற சூழ்நிலையில், 'ஹாய் மதன்' பகுதியை மட்டும் அல்ல... கார்ட்டூன்களையும்கூட நடுநிலையோடு படைப்பது அவருக்குச் சாத்தியம் ஆகாது என்ற முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது. குறிப்பிட்ட ஒரு தரப்பைப் பற்றிய நியாயமான விமரிசனங்களையோ, புகைப்படங் களையோ தவிர்த்துவிட்டு... செய்திகளையும் கருத்துக்களையும் நீர்க்கச் செய்வது வாசகர்களுக்குச் செய்யும் மிகப் பெரிய துரோகம் என்றே விகடன் கருதுகிறான்.

எனவே, இந்த இதழ் முதல் திரு. மதனின் கேள்வி- பதில் பகுதியும் அவருடைய கார்ட்டூன்களும் விகடனில் இடம் பெறாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்," என்று கூறியுள்ளார் விகடன் ஆசிரியர்.

இதன் மூலம் விகடனில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த மதன், முற்றாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்தப் பிரிவு நிச்சயம் இரு தரப்பினருக்கும் வருத்தமான விஷயம் தான்.

English summary
Popular Tamil magazine Ananda Vikatan has stopped Journalist, cartoonist Madhan's cartoons and question - answer section from this issue due to the later's objection on publishing a controversial photograph of Jayalalithaa.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X