For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இனப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக இறுதி வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்: சம்பந்தன் வேண்டுகோள்

By Mathi
Google Oneindia Tamil News

மட்டக்களப்பு: இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை அளிப்பதில் ராஜபக்சே அரசாங்கம் உளப்பூர்வமாக செயல்படவில்லை. இந்த இறுதி வாய்ப்பை ராஜபக்சே அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இலங்கைத் தமிழரசு கட்சித் தலைவரான இரா. சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பில் நடைபெற்ற இலங்கைத் தமிழரசு கட்சியின் 14-வது மாநாட்டில் அவர் ஆற்றிய உரை:

இலங்கைத் தீவை அன்னியர்கள் கைப்பற்று ஆண்ட பிறகு இது சுதந்திரம் அடைந்துவிட்டதாகப் பிரகடனம் செய்யப்பட்டதற்குப் பிந்தைய கடந்த 60 ஆண்டு கால வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதிரான காலத்தில் நிற்கிறோம்.

தமிழர்களுக்கு சொந்தமான அடிப்படை மனித உரிமைகளையும் தம்மைத் தாமே ஆள்வதற்கான நியாயமான அரசியல் அதிகாரங்களையும் கேட்டதற்காக மட்டுமே பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்ட புதைகுழிகளின் மீது நின்று கொண்டிருக்கிறோம்.

தமிழ் மக்கள் தாங்கள் நேசித்த அரசியல் விடுதலைக்கான அமைதிவழிப் போராட்டங்கள் வெற்றியடையாத சூழலில், ஆயுதமேந்திப் போராடி, தமது தூய உயிர்களை தியாகம் செய்துவிட்ட தமிழ் இளைஞர்களின் அர்ப்பணிப்புகளை மனதில் ஏந்தியபடி இங்கு நிற்கிறோம்.

இலங்கை அரசாங்கம் எமது இனத்தின் மீது ஓர் இனப்படுகொலையை நிகழ்த்தியது என்பதையும் எமது இனத்திற்கான அரசியல் உரிமைகளை அது தொடர்ந்தும் மறுத்துவருகின்றது என்பதையும் அனைத்துலக ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு பதிவாக மாற்றி ஐ.நா. தீர்மானத்தின் மூலம் ஒரு சர்வதேச கண்டனத்தை கொண்டுவந்து நாம் வெற்றியடைந்திருக்கிறோம்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியானது தந்தை செல்வநாயகத்தினால் தமிழர்களுக்கென இந்தத் தீவில் ஒரு சுயாட்சி அரசை நிறுவ வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கட்சி. தனது கொள்கையையே தனது பெயராகவும், அந்தக் கொள்கையையே தனது இயங்குவிதியாகவும் கொண்டிருக்கின்ற கட்சி.

இந்தத் தீவில், தமிழர்கள், உன்னதமான சமூக - பண்பாட்டு வாழ்வை மட்டுமல்லாது, தன்னிறைவான ஒரு பொருளாதாரப் பொறிமுறையையும்; முன்பொரு காலத்தில் கொண்டிருந்தனர். தமக்கெனத் தனித்த அரசுகளை நிறுவி, சீரிய முறையில், ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை, அவர்கள் தம்மைத் தாமே ஆண்டனர். பின்னர், இந்தத் தீவை கைப்பற்றிய வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள், தமது இலகுவான ஆளுதலுக்காக, முழுத் தீவையும் ஒரே நாடு என்று ஆக்குகின்ற வரையில் - இந்தத் தீவில் இறைமையுடைய தமிழரசுகளை எமது இனம் கொண்டிருந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற குடையின் கீழ் கொள்கை ரீதியாக ஒன்றிணைந்த தமிழ் அரசியல் கட்சிகளைத் தலைமையேற்று வழி நடத்துகிறோம். தமிழர்களுக்கு உரிமைகள் வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் இதயசுத்தியுடன் இல்லை

தமிழர் கடமை

இந்த நேரத்தில் நாம் பொறுமை காக்கவேண்டும். தமிழ் தேசிய இனப் பிரச்சினையில் உலக சமூகத்தினர் அதீத ஈடுபாடு கொண்டுள்ள இந்த நேரத்தில், அவர்களோடு நாம் சேர்ந்து இயங்க வேண்டும். அவர்களது ஆலோசனைகளை நாம் பெற்றும், அவர்களுக்கு எமது ஆலோசனைகளை வழங்கியும் ஒத்திசைவாக இயங்க வேண்டும். தமிழர்களுக்கு உரிமைகள் வழங்குவதற்கு இலங்கை அரசு இதயசுத்தியுடன் இல்லை என்பதை, உலக சமூகத்தின் முன் நாம் தெளிவாக நிரூபிக்க வேண்டும்.

ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்புக்குள் நமக்கான உரிமைகளைப் பெறுவது சாத்தியமற்றது என்பதை நாம் உலக சமூகத்திற்கு நிரூபிக்க வேண்டும்!

ஒன்றுபட்ட இலங்கை என்ற அமைப்பிற்குள் தமிழர்களுக்கான அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க பேரினவாத ஆட்சியாளர்கள் ஒருபோதும் முன்வர மாட்டார்கள் என்பதை நாங்களே சொல்லாமல், அனைத்துலக சமூகம் அதுவாகவே தன் அனுபவங்கள் வாயிலாக உணர வாய்ப்பளிக்க வேண்டும்!

நமது தேசிய நலன்களை அடிப்படையாக வைத்து இந்த உலகம் நிகழ்த்தும் சதுரங்க ஆட்டத்தின் ஏதோ ஒரு பகுதியாக, அவர்களது மனிதாபிமான உள்ளுணர்விற்கும் தேச நலன் சார்ந்த முனைப்பிற்கும் இடையிலிருக்கும் ஒரு புள்ளியில், நமது நலன்களும் பாதுகாக்கப்படலாம். அதற்கு உகந்த சூழலை நாம்தான் பேண வேண்டும். கனிந்துவரும் சூழலைக் குழப்பாமல், அனைத்துலக சமூகத்தை அசௌகரியப்படுத்தாமல், நிலைமையை நாங்கள் பக்குவமாக கையாள வேண்டும்.

சர்வதேச சூழல்

எண்பதுகளின் நடுப் பகுதியில் இந்தியத் தலையீடு நிகழ்ந்த போது இருந்த உலகப் போக்கு இப்போது மாறிவிட்டது. இப்போது - ஆடுகளம் பழையதானாலும், அதைச் சூழ நிகழ்ந்துவிட்ட மாற்றங்கள் புதியவை. ஆட்டம் பழையதானாலும், அதன் தந்திரோபாயங்கள் புதியவை. இலக்குகள் பழையவைதான் என்றாலும், அவற்றை அடைவதற்கான மூலோபாயங்கள் புதியவை. ஆட்டக்காரர்கள் பழையவர்கள் தான் எனினும், அவர்கள் சேர்ந்திருக்கும் அணிகள் புதியவை. தமிழர்களுக்கும் அப்படித்தான் - இலட்சியம் பழையதே ஆனாலும், இனி நாங்கள்; கைக்கொள்;ள வேண்டிய வழிமுறைகள் முற்றிலும் புதியவை. முன்பொரு காலம், அமெரிக்கா, இந்தியாவிற்கு எதிரான பக்கத்தில் இருந்தது. ஆனால், இன்று எமக்குச் சாதகமாகக் கனிந்து வந்துள்ள சூழலில் இந்தியாவும் அமெரிக்காவும் ஏறக்குறைய ஒரே பக்கத்தில் இருக்கின்றன. ஆனால் இலங்கை அரசாங்கமோ, இவர்களுக்கு மாறான பக்கத்தில் இருப்பவர்களுடன் நட்புறவைத் தொடர்ந்தும் வளர்த்துச் செல்கின்றது.

ஸ்ரீலங்கா அரசாங்கத்தை வளைத்து வியூகமிட்டு, ஐ. நா. மனித உரிமைகள் மன்றத்தில் அண்மையில் அமெரிக்கா சமர்ப்பித்த பிரேரணையை ஆதரித்து இந்தியா வாக்களித்தமை, எமக்குச் சாதகமாக அரங்கேறிய ஓர் அற்புதமான உலக நிகழ்வு. அதனை, எதிர்கால அரங்கேற்றங்களுக்கான ஓர் எதிர்வுகூரல் என்றே கருத வேண்டும்.

எனது பெருமதிப்பிற்குரியோர்களே! ஆளணிகள், அம்பு வில்லுகளுடன் சாதிக்க முடியாது போன ஒப்பற்ற உயரிய காரியங்களைக் கூட - உயிரழிவு ஏதுமின்றிச் சாதிக்கும் மகத்தான வாய்ப்பை இந்தப் புதிய ஆட்ட ஒழுங்கு எமக்குப் பெற்றுத் தரலாம். அதனால் தான் - நாம் பொறுமை காக்கவேண்டும்.

போரின் பாதிப்பு

முப்பது ஆண்டு கால மிக நீண்ட போர் எமது சமூகத்தின் வாழ்வாதார அபிவிருத்தியை முற்றாக முடக்கிவிட்டது என்பது உண்மைதான். அவ்வாறு முடக்கியது மட்டுமின்றி, எமது சமூகத்தின் பொருளாதாரத்தை பல தசாப்தங்களுக்குப் பின்தள்ளிவிட்டது என்பதும் உண்மைதான். அவ்வாறு பின்தள்ளியது மட்டுமன்றி, தாட்சண்யமின்றி நிகழ்த்தப்பட்ட போரின் நேரடியான தாக்கம், எமது சமூகத்தை, அன்றாட வாழ்வுக்கே அல்லற்படும்படியான அதல பாதாளத்தில் வீழ்த்திவிட்டது என்பதும் உண்மைதான்.

அபிவிருத்தி எனும் மாயப் பொறி

எங்களை, எமது சமூகத்தை, ஒட்டுமொத்தமான எமது இனத் தையே - இந்த அதல பாதாளத்திலிருந்து மீட்டு எடுத்து, உலகத் தரம் வாய்ந்த ஒரு வாழ்வின் சிகரத்திற்கு இட்டுச்செல்ல வேண்டிய பெரும் கடமை, எங்கள் எல்லோரிடமும் உள்ளது என்பதுவும் உண்மைதான். ஆனால், அதற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுக்கும் அபிவிருத்தி என்ற மாயப் பொறிக்குள் நாங்கள் சிக்கிவிடலாகாது. ஏனெனில், அது ஒட்டுமொத்தமான எமது இனத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்கும் ஒரு சூழ்ச்சிப் பொறி ஒரு மரணப் பொறி.

எமது மக்களின் புனர்வாழ்வுப் பணிகளில் எமது ஈடுபாட்டை இலங்கை அரசு விரும்பவில்லை. எமது மக்களின் மீள் கட்டுமானத் திட்டங்களில் பங்கேற்க நாம் முன்வைத்த யோசனைகளை இந்த அரசாங்கம் பரிசீலிக்கவில்லை. எந்த மக்களின் பிரதிநிதிகளாக நாம் உள்ளோமோ, அந்த மக்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கான வேலைத்திட்டங்களில் எமது பங்களிப்பையும் வழங்குவதற்கு எமக்கு இருக்கும் உரிமையை, இலங்கை அரசாங்கம் நிராகரித்தது. ஏனெனில் தமிழர் தாயகத்தின் குடிப்பரம்பல் கட்டமைப்பை மாற்றியமைத்து, தமிழினத்தினது தேசிய இயல்பின் அடிப்படையையே தகர்த்துவிடும் சதி நோக்கத்தையே, அபிவிருத்தி என்ற போர்வையில் இந்த அரசாங்கம் நடைமுறைப்படுத்த முனைகின்றது.

பொறுமைக்கும் எல்லை உண்டு

எமது பொறுமை காலவரையறை அற்றதாக நீண்டு செல்லப் போவதில்லை. எமது பொறுமைக்கும் எல்லைகள் உண்டு. பொறுமையின் அந்த எல்லையை நாம் தொட்டதன் பின்னரான, அடுத்த கட்டத் திட்டங்களை நாம் கொண்டுள்ளோம். இலங்கைத் தீவில் வாழும் எமது மக்களை ஒருங்கு திரட்டி, இந்த நாட்டிலுள்ள முற்போக்குச் சக்திகளின் ஒத்துழைப்புடனும், சர்வதேச சமூகத்தின் முழு ஆதரவுடனும் திடமான ஒரு சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுக்கவும் நாம் தயங்க மாட்டோம்.

தமிழ் மக்களின் சட்டபூர்வப் பிரதிநிதிகளான நாம் எல்லோரும் கூடியிருக்கின்ற இந்த அவையிலிருந்து, எம் எல்லோரது சார்பிலும், சிங்கள மக்களுக்கும், இராஜபக்சே அரசாங்கத்திற்கும், அனைத்துலக சமூகத்திற்குமான எமது நிலைப்பாட்டு விளக்கத்தை நான் தெளிவாக அளிக்க விரும்புகின்றேன்.

நாங்கள் கோருவதுதான் என்ன?

மாண்புமிகு சிங்கள மக்களே! உரிய அரசியல் அதிகாரங்களைப் பெற்று, தமது அரசியல், குடியியல், பொருளாதார, சமூக, கலாசார விடயங்களைத் தாமே நிர்வகிக்கும் ஆட்சியுரிமையை ஈட்ட வேண்டும் என்ற எமது இனத்தின் அரசியல் விருப்பு நியாயமானது. அது, தர்மத்தின் பாற்பட்டது. வரலாற்றின் வேரில் இருந்து எழுந்தது. அது எமது மக்கள் சமூகத்தின் ஓர் அடிப்படையான மனித உரிமையும் கூட. எமது அரசியல் விருப்பை அடைவதற்காக நாம் முன்வைக்கும் தீர்வானது - வேறு எந்த ஒர் இனத்தினதும் இறையாண்மையைக் கேள்விக்கு உட்படுத்தாதது இந்த நாட்டின் ஐக்கியத்தைப் பிரிக்கும் கபட நோக்கங்கள் எதுவும் இல்லாதது. வேறு எந்த ஒரு நாட்டினதும் தேசிய நலன்களைப் பாதிக்கும் எண்ணங்கள் அற்றது. இந்த நாட்டிற்குள், உங்களது பூர்வீக நிலங்களில், உங்களுக்கான அதிகாரங்களைப் பிரயோகித்து நீங்கள் வாழ்வது போலவே, தமிழ் பேசும் மக்களும், தமது பூர்வீக நிலங்களில், தமக்கான அதிகாரங்களைப் பிரயோகித்து வாழும் உரிமையை உறுதிப்படுத்த முனைகின்றார்கள் என்ற அடிப்படை விடயத்தை நீங்கள் தயவு செய்து புரிந்து கொள்ள வேண்டும். எனவே, தனிப்பட்ட அரசியல் உள்நோக்கங்களுக்காக, இன முரண்பாட்டை முனைப்புறச் செய்து, இனத் துவேசத்தைத் தூண்டும் விதமாக முன்வைக்கப்படும் கொள்கைகளைப் புறக்கணித்து - தமிழினத்தின் நியாமான அரசியல் அபிலாசைகளைப் புரிந்து, அங்கீகரித்து, அவர்களையும் சகோதரர்களாக அரவணைத்து - ஐக்கிய இலங்கைக்குள் நல்லிணக்கத்துடன் வாழ நீங்கள் முன்வரவேண்டும்.

இனவாத ராஜபக்ச அரசு

ஆனால், இன்றைய இலங்கை அரசாங்கமோ, தமிழர் பிரச்சினைக்கு உருப்படியான தீர்வு காணும் அரசியல் விருப்புறுதி எதனையும் கொண்டிருக்கவில்லை. மாறாக - தீர்வு காண்பதை நோக்கி எடுக்கப்படும் முயற்சிகளைத் தாமதப்படுத்தி, தவிர்த்து, ஒரேயடியாகக் கைவிடும் கபட யுக்தியினையே அது செயற்படுத்துகின்றது. ராஜபக்சே அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்துமே - நேர்மையற்று, விவேகமற்று, முதிர்ச்சியற்று இருப்பதுடன், வெறுமனே இனவாத நிலைப்பாட்டினை முதன்மைப்படுத்துபவையாகவே இருக்கின்றன.

இந்த அரசாங்கம் தனது இந்தக் கபட நிலைப்பாட்டை விடாப்பிடியாகத் தொடர்ந்தும் கைக்கொண்டிருக்குமானால், அது, இந்த நாட்டை, முன்னெப்போதும் இல்லாதவிதமான ஒரு பின்னடைவை நோக்கி, மிகத் தெளிவாக இட்டுச்செல்கின்றது என்றே அர்த்தமாகும். தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணக் கிடைத்திருக்கும் இந்த இறுதி வாய்ப்பைக் கச்சிதமாகப் பயன்படுத்தி, இதயசுத்தமாக எம்மோடு கைகோர்க்க இந்த நாட்டின் அரசாங்கம் தவறினால் இந்த நாடு ஒரு வரலாற்றுப் பின்னடைவைச் சந்திக்கப் போவது உறுதி.

இறுதி வாய்ப்பு..

இந்தத் தீவில் நிரந்தரமான அமைதியை ஏற்படுத்த இதுதான் இறுதி வாய்ப்பு. இந்தத் தீவில் அமைதி நிலவுவதே தமது தேச நலன்களுக்கும், சர்வதேச நலன்களுக்கும் உகந்தது எனக் கருதுகின்ற நாடுகள், இந்த இறுதி வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்துப் பயன்படுத்திவிட வேண்டும். நியாயமான அரசியற் கோரிக்கைகளை முன்வைத்துத் தமிழினம் அன்று முன்னெடுத்த மென்முறைப் போராட்டங்கள் எல்லாம், வன்முறை மூலம் அடக்கப்பட்ட நிகழ்வுகள் வரலாற்றுப் பாடங்கள். 1956, 58, 61, 77, 81, 83 என நீண்ட - தமிழினத்திற்கு எதிரான இந்த வன்முறை மூல அடக்குமுறை வரலாறே, பெரும் யுத்தத்திற்கும் வழிகோலி, பின்னர் 2009 வரையும் தொடர்ந்தது. இப்போது, மீண்டும், நாங்கள், எமது அரசியல் உரிமைகளைக் கோரி அமைதிப் போராட்டங்களைத் தொடங்குகின்ற வேளையில், முன்னரைப் போலவே, இப்போதும், மீண்டும் - எம் மீது ஆயுத வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதற்கான பாதகச் சூழல் இருப்பாகத் தமிழ் மக்கள் அஞ்சுகின்றார்கள். அதற்கான அறிகுறிகளே தென்படுகின்றன. அவ்வாறு மீளவும் எம் மீது ஆயுத வன்முறை பிரயோகிக்கப்படுமானால், அது, மீண்டும் இந்தத் தீவை ஒரு மிகப் பாரதூரமான சூழலுக்குள்ளேயே இட்டுச் செல்லும் என்பதுடன், அது தமிழினத்திற்குப் பெரும் அழிவையே ஏற்படுத்தும். எனவே, அவ்வாறு மீண்டும் தமிழினத்தின் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதைத் தடுக்கும் பொறுப்பும் கடமையும் அனைத்துலக சமூகத்திடமே உள்ளது. நீண்ட ஆயுதப் போராட்டமும் அது நடத்தப்பட்ட விதமும் - எமது மக்களுக்கு இழப்பையும், அழிவையும், களைப்பையும், சலிப்பையும் ஏற்படுத்தியிருக்கலாம் ஆனால், போர் முடிந்ததன் பின்னான நிகழ்வுகள் எமது மக்களுக்கு விரக்தியையும், சினத்தையும், சீற்றத்தையுமே கொடுத்தபடி உள்ளன என்பதை இந்த உலகம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்றார் அவர்.

English summary
The Illankai Thamil Arasu Kachchi and Tamil National Alliance leader R. Sambanthan MP was warned Mahinda Rajapakse this is the last chance to solve the Tamils Problem in Sri Lanka.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X