For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜஸ்வந்த் சிங் துணை ஜனாதிபதி ஆவாரா?

By Chakra
Google Oneindia Tamil News

Jaswant Singh
டெல்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மூத்த பாஜக தலைவர் ஜஸ்வந்த் சிங் விரும்புவதாகத் தெரிகிறது. இது தொடர்பாக சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவை சந்தித்து ஜஸ்வந்த் ஆதரவும் கோரினார்.

இந்திய ராணுவ அதிகாரியாக இருந்தவரான ஜஸ்வந்த் சிங் சர்வதேச விவகாரங்களில் பெரும் நிபுணத்துவம் பெற்றவர். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது வெளியுறவுத்துறை, நிதித்துறை, பாதுகாப்புத்துறை ஆகிய முக்கிய துறைகளுக்கு அமைச்சராகவும் இருந்தார்.

காந்தஹார் விமானக் கடத்தல் நடந்தபோது பயணிகளை மீட்க, தானே தனி விமானத்தில் ஆப்கானிஸ்தான் சென்ற துணிச்சல்காரர் ஜஸ்வந்த் சிங். மிகச் சிறந்த படிப்பாளி, பாஜகவில் இருந்தாலும் மதசார்பின்மையில் நம்பிக்கை கொண்டவர். அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பைப் பெற்றவர். இந்திய-அமெரிக்க நல்லுறவுக்கு ஜஸ்வந்த் சிங் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த காலம் தான் ஒரு மைல் கல்லாகும். பாகிஸ்தானை ஆதரித்து வந்த அமெரிக்காவை இந்தியா பக்கமாக திருப்பிக் காட்டியவர்.

ஆனால், தேசிய அளவில் ஜஸ்வந்த் சிங்குக்கு நல்ல பெயர் இருந்தாலும் அவரது சொந்த மாநிலமான ராஜஸ்தானில் அரசியல்ரீதியில் தனது செல்வாக்கை இழந்துவிட்டார். இதனால், மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒழிய அரசியல்ரீதியில் ஜஸ்வந்த் சிங்குக்கு தொடர்ந்து ஓய்வு தான்.

இதனால் துணை ஜனாதிபதி பதவிக்கு ஜஸ்வந்த் சிங் குறி வைப்பதாகத் தெரிகிறது. இதற்கு தனது மாநிலத்தின் மூத்த பாஜக தலைவரான வசுந்தரா ராஜே சிந்தியாவின் ஆதரவையும் ஜஸ்வந்த் பெற்றுள்ளார். ஜஸ்வந்த் துணை ஜனாதிபதியாகிவிட்டால் ராஜஸ்தான் பாஜகவை வசுந்தராவால் முழு அளவில் கட்டுப்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் நேற்று கருப்புப் பணத்துக்கு எதிரான போராட்டம் தொடர்பாக முலாயம் சிங்கின் ஆதரவைப் பெற அவரது இல்லத்துக்கு யோகா குரு ராம்தேவ் வந்தார். இருவரும் பேசிக் கொண்டிருந்தபோது ஜஸ்வந்த் சிங்கும் அங்கு வந்தார். மூவரும் கருப்புப் பணப் பிரச்சனை குறித்துப் பேசியதாக வெளியில் கூறப்பட்டது.

ஆனால் பின்னர் முலாயமை தனியாக சந்தித்துப் பேசிய ஜஸ்வந்த் சிங், துணை ஜனாதிபதி பதவிக்கு தன்னை முன் நிறுத்தி அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் பெற்றுத் தருமாறு கோரியதாகத் தெரிகிறது.

ஜனாதிபதி, துணை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பாஜக இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முடிவு எடுக்க முடியாமல் திணறுகிறது என்பதே உண்மை. துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியையோ நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியையோ தேசிய ஜனநாயகக் கூட்டணி ஏற்காது என்று பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் கூறியதற்கு அந்தக் கூட்டணியின் முக்கியக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கடும் எதிர்ப்புத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தல் விஷயத்தில் நாங்கள் தனியே தான் முடிவெடுப்போம், பாஜகவின் முடிவையெல்லாம் ஏற்க முடியாது என்று ஐக்கிய ஜனதா தளத் தலைவர்களான சரத் யாதவ், நிதிஷ் குமார் ஆகியோர் கூறிவிட்டனர்.

அதே போல எந்தக் கூட்டணியையும் சாராத தெலுங்கு தேசம், அதிமுக, பிஜூ ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சி, பகுஜன் சமாஜ் ஆகியவை பாஜகவை மதிக்கவே இல்லை. இதனால், பிறரது ஆதரவு இல்லாமல் தங்களது வேட்பாளரை நிறுத்தினால் தோல்வி உறுதி என்பதால் பாஜக அமைதி காத்து வருகிறது.

இந் நிலையில் தான் தனது தனிப்பட்ட நட்பு, செல்வாக்கை வைத்து துணை ஜனாதிபதி பதவிக்கு ஜஸ்வந்த் சிங் முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஆனால், அவரது கட்சியில் அவருக்கு எந்த அளவுக்கு ஆதரவு இருக்கும் என்பது தெரியவில்லை.

ரப்பர் ஸ்டாம்புகளுக்குப் பதில் பல்துறை நிபுணர்களான ஜஸ்வந்த் போன்றவர்கள் உயர்த்த பதவிக்கு வருவது நாட்டுக்கு நிச்சயம் நல்லதே. ஆனால், அது நடக்குமா?.

English summary
When Yadav was meeting yoga guru Ramdev at his residence on the issue of black money, Jaswant Singh drove in and was inside the SP leader's house for ten minutes. It is understood that the three discussed the issue of black money stashed away abroad. Jaswant Singh had raised the issue on behalf of the BJP in the Lok Sabha. The meeting between the SP chief and Jaswant Singh triggered speculation that the BJP leader may be making an effort to lobby for himself as a candidate in the Vice-President poll. BJP and NDA have not yet taken a stand on issue of President and Vice-President candidates.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X