
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி நிறுத்தியிருக்கும் குடியரசுத் தலைவர் வேட்பாளரான பிரணாப் முகர்ஜியை இப்போது கடுமையாக எதிர்க்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி கடைசிநேரத்தில் நிச்சயம் ஆதரிப்பார் என்று காங்கிரஸ் கட்சி ந்மபிக்கை தெரிவித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளுமே பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கின்றன. இதனால் மமதா பானர்ஜியும் கூட கடைசிநேரத்தில் எப்படியும் பிரணாப்பை ஆதரித்துவிடுவார் என்றார்.
அப்ல்துகலாமுக்காக ஃபேஸ்புக்கில் மமதா ஆதரவு திரட்டி வரும் நிலையில் காங்கிரஸ் கட்சி இன்னமும் நம்பிக்கை இருக்கிறது என்று கூறியிருப்பது அரசியல் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், எனது சகோதரி போன்ற மமதா பானர்ஜி நிச்சயம் என்னை ஆதரிப்பார் என்று பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.










