For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிரணாப் முகர்ஜிக்கு எதிராக தமிழக எம்.பி., எம்.எல்.ஏக்கள் வாக்களிக்க வேண்டும் - சீமான்

By Mathi
Google Oneindia Tamil News

Seeman
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜி, ஈழத் தமிழினப் படுகொலை சதியில் முக்கியப் பங்கு வகித்தவர் என்பதால் அவருக்கு எதிராக தமிழக எம்.பிக்களும் எம்.எல்.ஏக்களும் வாக்களிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

குடியரசுத் தலைவர் பதவிக்கான காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, ஈழத்தில் தமிழினம் அழித்தொழிக்கப்பட்ட சதியில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார் என்பதை நாம் தமிழர் கட்சி நினைவூட்ட கடமைப்பட்டுள்ளது.

இலங்கையில் போர் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பாதுகாப்பு வளையத்திற்குள் தஞ்சமடைந்த மக்களின் மீது சிறிலங்க இராணுவத்தினர் கனரக ஆயுதங்களையும், தடை செய்யப்பட்ட குண்டுகளையும் பொழிந்து ஒவ்வொரு நாளும் பேரழிவை ஏற்படுத்திக்கொண்டிருந்தபோது, போரை நிறுத்த வேண்டும் என்ற குரல் தமிழ்நாட்டில் வலிமையாக ஒலித்தது. அப்போது பிரதமரின் சிறப்புத் தூதராக இலங்கை சென்றார் பிரணாப் முகர்ஜி. இலங்கை பயணிப்பதற்கு முன்பாக சென்னை வந்து, அப்போது இராமசந்திரா மருத்துவமனையில் முதுகில் அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்த அப்போதைய முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து பேசிவிட்டு கொழும்பு சென்றார்.

கருணாநிதியைச் சந்தித்துவிட்டுச் சென்றதால் போரை நிறுத்துமாறு இந்தியாவின் சார்பாக பிரணாப் முகர்ஜி வலியுறுத்துவார் என்று தமிழ்நாட்டு மக்கள் எதிர்ப்பார்த்தனர்.

கொழும்புவில் இலங்கை அதிபர் ராஜபக்சவையும், அவருடைய அமைச்சர்களையும் சந்தித்துப் பேசிவிட்டு டெல்லி திரும்பிய பிரணாப் முகர்ஜி வெளியிட்ட அறிக்கை தமிழர்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டியதுபோல் இருந்தது. போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தாமல், போரில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொண்டதாக தனது அறிக்கையில் பிரணாப் முகர்ஜி தெரிவித்திருந்தார்.

அதுமட்டுமின்றி, இலங்கை அரசு மேற்கொண்டு வரும் போரினால் தமிழர்கள் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான வழி பிறந்துள்ளது என்றும் அந்த அறிக்கையில் பிரணாப் முகர்ஜி கூறியிருந்தது இந்திய அரசு ராஜபக்ச நடத்தும் போருக்கு ஆதரவாக நிற்கிறது என்பதை புலப்படுத்தியது.

அதுவரை போரின் மூலம் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனைக்குத் தீர்வு கிடைக்காது என்று கூறிவந்த இந்திய மத்திய அரசு, போரினால் தீர்விற்கான வழி பிறந்திருக்கிறது என்று கூறியது.இதுமட்டுமல்ல, இலங்கை உள்நாட்டுப் போரினால் அப்பாவி மக்கள் கடுமையான பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர் என்று நாடாளுமன்றத்தில் தமிழக உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் பேசியபோது, போர் நடக்கும் பகுதியில் 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர் என்று எண்ணிக்கையை குறைத்துப் பேசியவர் பிரணாப் முகர்ஜி.

உண்மையில் போர் நடந்த பகுதியில் அப்போது இருந்த மக்களின் எண்ணிக்கை 4 இலட்சம் பேர் ஆகும். பிரணாப் எண்ணிக்கையை குறைத்துக் கூறியதை அனைத்து உறுப்பினர்களும் கடுமையாக கண்டித்தனர். அப்போது பதிலளித்த பிரணாப், இலங்கை அரசு கொடுத்த புள்ளி விவரத்தையே தான் சொன்னதாக திமிருடன் பதில் கூறினார்.

தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், இலங்கை அரசு நடத்திய தமிழின அழிப்புப் போருக்கு பின்னால் நின்று செயல்பட்ட முக்கிய சூத்ரதாரிகளில் ஒருவரான பிரணாப் முகர்ஜியை இன்று குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி.

இவருக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் நாடாளுமன்ற, சட்டப் பேரவை உறுப்பினர்கள் வாக்களித்தால் அது இலங்கையில் இன அழித்தலுக்கு ஆளான நம் சொந்தங்களுக்குச் செய்யும் துரோகமாகும். எனவே குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கப் போகும் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒவ்வொரு உறுப்பினரும் பிரணாப் முகர்ஜியை தோற்கடிக்கும் வகையில் எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் வேண்டுகோள் விடுத்துள்ளார் சீமான்.

English summary
Naam Thamizhar Party leader Director Seeman had appeal to all Tamilnadu Mps, Mlas should vote against Pranab Mukherjee for his Pro SriLankan Stand.
 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X