
டெல்லி: ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து பி.ஏ.சங்மா விலகாவிட்டால் அவரை கட்சியிலிருந்து நீக்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முடிவு செய்துள்ளார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும் தன்னிச்சையாக செயல்பட்டு வருபவர் சங்மா. ஜனாதிபதி தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு அக் கட்சியின் தலைவர் சரத் பவார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஆனால் பவாருடன் கலந்து ஆலோசிக்காமலேயே தன்னைத் தானே ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துக் கொண்டு தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஒடிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக்கை சந்தித்து ஆதரவு திரட்டினார் சங்மா.
மேலும் பாஜக கூட்டணியின் ஆதரவையும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பஞ்சாபின் ஆளும் கட்சியான சிரோமணி ஆகாலி தளத்தின் ஆதரவையும் கோரி வருகிறார். இந் நிலையில் அவரை போட்டியிலிருந்து விலகுமாறு பவார் அறிவுறுத்தியுள்ளார். ஆனால், அதையெல்லாம் காதில் வாங்கும் நிலையில் சங்மா இல்லை.
இத்தனைக்கும் அவருக்கு அவரது கட்சியைச் சேர்ந்த யாருமே ஆதரவு தரவில்லை. இந் நிலையில் பவாரின் வலது கலமான பிரபுல் படேல் நிருபர்களிடம் பேசுகையில்,
நாங்கள் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜியை ஆதரிக்கிறோம். சங்மாவுக்கு எங்கள் கட்சி கூட ஆதரவு தரவில்லை. இதனால் அவர் போட்டியிடக் கூடாது. அதையும் மீறி சங்மா போட்டியிட்டால் என்ன செய்வோம் என்பதை இப்போது சொல்ல மாட்டோம். அவர் ஒரு மூத்த தலைவர். கட்சியின் உத்தரவை மதிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
இதன்மூலம், சங்மா போட்டியிட்டால் அவர் கட்சியிலிருந்து துரத்தப்படுவார் என்பது உறுதியாகியுள்ளது.










