
வாஷிங்டன்: ஈராக்கிற்கான அடுத்த அமெரிக்க தூதராக அதிபர் ஒபாமாவால் பரிந்துரைக்கப்பட்ட பிரெட் மெக்கர்க் தான் அந்த பதவியை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்தபோது கடந்த 2008ம் ஆண்டு பிரெட் மெக்கர்க் பாக்தாத்தில் பணியாற்றினர். தற்போது அவரை ஈராக்கிற்கான அடுத்த அமெரிக்க தூதராக அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பரிந்துரைத்துள்ளார். இதற்கு குடியரசுக் கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவருக்கு நிர்வாகத் திறமையே இல்லை என்று குற்றம் சுமத்தினர்.
இந்நிலையில் பிரெட் மெக்கர்க் பெயர் அறிவிக்கப்பட்ட பிறகு ஒரு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இமெயிலில் கூறியிருப்பதாவது,
மெக்கர்க் தி வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையின் பெண் நிருபர் கினா சானுடன் உறவு வைத்திருந்தார். அவர்கள் அண்மையில் தான் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் சான் கடந்த வாரம் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கையில் இருந்து விலகினார். அவர் பிரசுரிக்காத செய்திகளை மெக்கர்க்கிற்கு காண்பித்துள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நாட்டு நலன் கருதி ஈராக்கிற்கான புதிய தூதராக தான் பதவியேற்கப் போவதில்லை என்று மெக்கர்க் தெரிவித்துள்ளார். இந்த முடிவை அவர் கனத்த இதயத்துடன் எடுத்ததாகத் தெரிவித்துள்ளார். மேலும் தனது முடிவு குறித்து அவர் அதிபர் ஒபாமா, வெளியுறவுச் செயலாளர் ஹில்லாரி கிளிண்டன் ஆகியோருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.










