
சிட்னி: இந்தோனேஷியா நாட்டு கடற்பரப்பில் இருந்து ஆஸ்திரேலியா நாட்டின் கிறிஸ்துமஸ் தீவுக்கு 200 அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் மூழ்கியது. இதில் 75 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று கூறப்படுகிறது. மேலும் பலரையும் காணவில்லை என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
கிறிஸ்துமஸ் தீவுக்கு அருகில் கவிழ்ந்த படகு ஒன்றின் மீது ஏறி நின்று கொண்டு 40க்கும் மேற்பட்டோர் உதவி கோரினர். அப்போது அந்த வழியாக ஆஸ்திரேலியா கடற்படை ஹெலிகாப்டர் சென்றது. இதைத் தொடர்ந்து இந்தோனேஷியா கடற்படைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக இந்தோனேஷிய கடற்படை கப்பல்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தவித்தோரை மீட்டனர். ஒரே படகில் 200க்கும் அதிகமானோர் ஏற்றப்பட்டதால் படகு கடலில் மூழ்கியிருக்கிறது. இதில் 75க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மீட்புப் பணிகளுக்கு உதவ தயாராக இருப்பதாக ஆஸ்திரேலியாவும் தெரிவித்துள்ளது. இருப்பினும் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தெரிகிறது.
இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கள்ளத்தனமாக படகுகளில் அகதிகளாக செல்வதும் அவர்கள் நடுக்கடலில் மூழ்கி உயிரிழப்பதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு 200 பேர் வரை பலியாகியிருந்தனர். இவர்களில் ஈழத் தமிழர்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.










