நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆண்டாளைப் பற்றி அவதூறான சிறுகதை சேர்த்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பல்கலைக்கழகங்களில் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை பாடங்கள் மாற்றியமைக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஒரு ஆண்டிற்கு முன்பே பாடக்குழு கூடி அனைத்து கல்வியாளர்கள் மற்றும் பதிப்பகங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆய்வுக் கட்டுரைகளை பரீசிலித்து பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 2012-13ம் கல்வியாணடில் முதலாம் பருவத்திற்கு பாடங்கள் மாற்றப்பட்டுள்ளன. கடந்த 4 நாட்களுக்கு முன்பு பல்கலைக்கழக இணையதளத்தில் பாடத்திட்டம் வெளியிடப்பட்டது. இதில் தமிழ் பாடத்தில் ஆண்டாளை தேவதாசியாகவும், அவர் பெரியாழ்வாருக்கு திருட்டுத்தனமாக பிறந்ததாகவும், ஆண்டாள் மீது மன்னர் வல்லபதேவன் மோகம் கொண்டு பரிசுகள் அனுப்பியதாகவும் சிறுகதை உள்ளது. மேலும் ஆபாச வர்ணனைகளும் இடம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து பல்கலைக்கழகத்தில் இப்பாடத்தை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில பாரத வித்யார்த்தி பரிஷத் போஸ்டர்கள் ஒட்டியுள்ளது.


















