
கொல்கத்தா: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக, அதிமுக, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரிக்கும் வேட்பாளரான பி.ஏ.சங்மா இன்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜியை கொல்கத்தாவில் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
குடியரசுத் தலைவர் தேர்தலில் பிரணாப் முகர்ஜியை எதிர்த்துப் போட்டியிடும் சங்மாவை பாஜக, அதிமுக, பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாக ஆதரிக்கின்றன. இடதுசாரிகளில் மார்க்சிஸ்ட் கட்சி பிரணாப்பை ஆதரிக்க முடிவு செய்திருக்கிறது. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் கலகத்தை தொடங்கி வைத்த திரிணாமுல் காங்கிரஸ் தமது நிலைப்பாட்டை தெரிவிக்கவில்லை.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் சங்மாவை ஆதரிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி கோரிக்கை விடுத்திருந்தது. பி.ஏ.சங்மாவும் மமதாவுடன் தொடர்ந்து தொலைபேசியில் மமதாவை தொடர்பு கொண்டு ஆதரவு கோரினார். கடந்த வாரம் மமதாவை சந்திக்க நேரம் ஒதுக்குமாறு சங்மா கோரியிருந்தும் சந்திப்பு நடைபெறவில்லை.
இந்நிலையில் இன்று கொல்கத்தாவில் மமதா பானர்ஜியை கொல்கத்தாவில் நேரில் சந்தித்து தம்மை ஆதரிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தேசியவாத காங்கிரஸை உருவாக்கி பினன்ர் திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்து இங்கிருந்தும் விலகி தேசியவாத காங்கிரஸுக்குப் போய் ராஜினாமா செய்தவர் சங்மா. தமது கட்சியில் இருந்து வெளியேறிய ஒருவரை ஆதரிப்பதா? என்பதுதான் மமதாவின் தயக்கமாகக் கூறப்படுகிறது. இன்றைய சந்திப்பின் போதும் சங்மாவை ஆதரிப்பதாக எந்த ஒரு உறுதியையும் மமதா கொடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது. இருப்பினும் சங்மா சொல்வதைப் போல் அதிசயம் ஏதேனும் நிகழ்கிறதா? என பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.





















