
சென்னை: தமிழக அமைச்சரவை தற்போதைக்கு மாற்றி அமைக்கப்படப் போவதில்லை என வெளியான தகவலால் அமைச்சர் பெருமக்கள் பலர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பல்வேறு காரணங்களால் போயஸ் கார்டனை விட்டு வெளியேறி, மீண்டும் வந்துவிட்டார். தமிழக சட்டசபை கூட்டம் முடிந்த பின்பு அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அதன் பிறகு புதுக்கோட்டை இடைத்தேர்தல் முடிந்த பிறகு அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்நிலையில் ஜெயலலிதா கொடநாடு சென்றுள்ளார். அங்கு இருந்து தான் அவர் பல முக்கிய முடிவுகளை எடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அதன்படி தற்போது உள்ள அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைத்து 25 ஆக்க அவர் முடிவு செய்துள்ளதாகவும் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு பேச்சு கிளம்பியது.
ஆனால் ஜெயலலிதா ஜோதிடத்தில் மிகவும் நம்பிக்கை உள்ளவர் என்பதால் அவரது ராசிப்படி வரும் செப்டம்பர் வரை அவர் எந்தவித முடிவையும் எடுக்க மாட்டார் என போயஸ் கார்டனில் இருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றது. இந்த தகவல் பல அமைச்சர்களுக்கு அவரவர் ஆதரவாளர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
இதனால் பல அமைச்சர்கள் அப்பாடா இப்போதைக்கு நாம் தப்பித்தோம் என நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.


















