Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

டிஎன்ஏ சோதனை.. கண்ட்ரோல் ரூம்.. இண்டர்நெட்..: 'ஹைடெக் பொறியில்' சிக்கிய அபு ஜிண்டால்!

Posted by:
Published: Thursday, June 28, 2012, 11:17 [IST]

 Abu Jundal S Online Activities Landed Him In Police Net

டெல்லி: தனது பயங்கரவாத செயல்களுக்கு ஆட்களைத் திரட்டவும் நிதி திரட்டவும் இணையத்தளங்கள் மூலம் முயற்சிகள் மேற்கொண்டதால் தான் உளவுப் பிரிவினரின் கண்ணில் பட்டு சிக்கியுள்ளான் அபு ஜிண்டால்.

சையத் சபியூதீன் அன்சாரி என்ற பெயர் கொண்ட அபு ஜிண்டால் மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு முழு அளவில் உதவியவன் ஆவான். மும்பையில் தாக்குதல் நடத்த வந்த 10 தீவிரவாதிகளுக்கும் லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாத அமைப்புடன் சேர்ந்து பயிற்சி அளித்ததோடு, அவர்களுக்கு இந்தி சொல்லுக் கொடுத்து, மும்பை குறித்த விவரங்களை வழங்கியதில் முக்கிய பங்கு வகித்துள்ளான்.

மேலும் மும்பை தாக்குதல் நடந்தபோது 3 செல்போன்கள் மூலம் பாகிஸ்தானில் இருந்து உத்தரவுகளைப் பிறப்பித்த கண்ட்ரோல் ரூமிலும் இவன் இருந்துள்ளான்.

கிட்டத்தட்ட 163 முறை இந்த கண்ட்ரோல் ரூமில் இருந்து 10 தீவிரவாதிகளுடனும் அபு ஜிண்டால், லஷ்கர் ஏ தொய்பா தீவிரவாதிகள், ஐஎஸ்ஐ உளவுப் பிரிவினர் பேசியுள்ளனர். அதே போல இந்த 3 செல்போன்களில் இருந்தும் இந்த கண்ட்ரோல் ரூமுக்கு 63 முறை கால்கள் சென்றுள்ளன.

மும்பையில் தாக்குதல் தொடங்கிய உடனேயே இந்த செல்போன் உரையாடல்களை மும்பை தீவிரவாதத் தடுப்பப் பிரிவினரும், ரா, ஐபி உள்ளிட்ட உளவுப் பிரிவினரும் இடைமறித்து கேட்க ஆரம்பித்துவிட்டனர்.

அதில் பேசிய நபர்களை அடையாளம் காணும் முயற்சிகளும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் உளவுப் பிரிவினர் உதவியோடு தொடங்கின. அதில் பேசிய ஒருவர் அபு ஜிண்டால் என்பது உறுதியானது.

இதையடுத்து மகாராஷ்டிரத்தின் பீட் பகுதியில் உள்ள அவனது வீட்டுக்குச் சென்ற உளவுப் பிரிவினர் அவன் குறித்து விசாரணை நடத்தியபோது, கடந்த 6 ஆண்டுகளாக அவன் தங்களுடன் தொடர்பில் இல்லை என்று கூறியுள்ளனர்.

இருப்பினும் அந்தக் குடும்பத்தினரின் ரத்த மாதிரிகளை இந்திய உளவுப் பிரிவினர் சேகரித்துக் கொண்டு வந்தனர்.

இந் நிலையில், மும்பை தாக்குதலுக்குப் பின் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐ தயாரித்துத் தந்த போலி பாஸ்போர்ட்டுடன் செளதி அரேபியாவுக்குச் சென்றுவிட்டான் அபு ஜிண்டால். ரியாசத் அலி என்ற பெயரில் தயாரித்துத் தரப்பட்ட போலி பாஸ்போர்ட்டுடன் செளதி அரேபியத் தலைநகர் ரியாத்தில் ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் வேலைக்கும் சேர்ந்துவிட்டான்.

சில காலம் அமைதியாக இருந்த இவன், மீண்டும் தனது தீவிரவாத தொடர்புகளை புதுப்பிக்க
ஆரம்பித்தபோது தான் இந்தியா மற்றும் அமெரிக்க உளவுப் பிரிவினரின் கண்ணில் பட்டான்.

அதற்கு முக்கியக் காரணம், இவன் தனது உண்மையான பெயரான சையத் சபியூத்தீன் அன்சாரி என்ற பெயரிலான இ-மெயில்களை மீண்டும் உபயோகிக்க ஆரம்பித்ததோடு, லஷ்கர் அமைப்பு சார்ந்த இணையத்தளங்களில் மீண்டும் தனது கருத்துக்களை எழுத ஆரம்பித்தான்.

இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத செயல்களுக்கு அந்த இணையத்தளம் உள்பட ஆன்லைனில் ஆட்களைத் திரட்டவும், நிதி திரட்டவும் ஆரம்பித்தான். அந்த இணையத்தளத்தை தீவிரமாக கண்காணித்து வந்த இந்திய உளவுப் பிரிவினருக்கு அது அபு ஜிண்டாலாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படவே, அதை அமெரிக்க உளவுப் பிரிவினருக்கும் தெரிவித்தனர்.

இந் நிலையில் அடுத்தகட்டமாக தனது உண்மையான பெயரில் பேஸ்புக்கில் தனது அக்கெளண்டை ஆரம்பித்தான் அபு ஜிண்டால்.

இதையடுத்து அமெரிக்க உளவுப் பிரிவினரும், ரா அமைப்பினரும் களத்தில் இறங்கி விசாரணையை ஆரம்பித்ததில் அவன் செளதி அரேபியாவில் இருந்து செயல்படுவது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து செளதி அரேபியாவில் நடத்தப்பட்ட விசாரணைகளில் அபு ஜிண்டான் அடையாளம் காணப்பட்டான். இதையடுத்து செளதி அரசிடம் பேச்சுவார்த்தை தொடங்கியது.

அபு ஜிண்டாலை தங்களிடம் ஒப்படைக்குமாறு இந்தியா கோரியது. அமெரிக்காவும் இந்த விஷயத்தில் செளதியே நெருக்கியது. ஆனால், இவன் தான் அபு ஜிண்டால் என்பதை உறுதி செய்ய ஆதாரங்களை செளதி அரேபியா கோரியது.

இதையடுத்து அவனது குடும்பத்தினரிடம் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளில் டிஎன்ஏ மரபணு சோதனை நடத்தப்பட்டு அதன் ரிப்போர்ட் செளதி அரேபியாவிடம் தரப்பட்டது. இதனையடுத்து அபு ஜிண்டாலை செளதி போலீசார் பிடித்துச் சென்று ரத்த மாதிரியை எடுத்து டிஎன்ஏ சோதனை நடத்தியுள்ளனர்.

அப்போது இரு டிஎன்ஏ சோதனை முடிவுகளும் மேட்ச் ஆனதையடுத்து இவன் தான் அபு ஜிண்டால் என்பதும், பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதைப் போல காட்ட போலி பாஸ்போர்ட்டில் செளதி வந்துள்ளதும் உறுதியானது.

இதைத் தொடர்ந்து இந்தியா, அமெரிக்கா, செளதி அரேபியா இடையே உயர் மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இறுதியில் அவனை இந்தியாவிடம் ஒப்படைக்க செளதி அரேபியா ஒப்புக் கொண்டு, விமானத்தில் ஏற்றி டெல்லிக்கு அனுப்பி வைத்தது.

ஆன்லைனில் இவன் தலையைக் காட்டாமல் இருந்திருந்தால் இவன் சிக்கியிருக்கவே மாட்டான், இவனை நாம் தொடர்ந்து தேடிக் கொண்டே இருந்திருப்போம் என்கிறார்கள் இந்திய உளவுப் பிரிவினர்.

ரா, ஐபி, மும்பை உளவுப் பிரிவு, அமெரிக்கா, செளதி அரேபிய உளவுப் பிரிவுகளை ஒருங்கிணைத்து இவனை வளைத்ததில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் பங்கும் மிக முக்கியமானது என்கிறார்கள்.

ஏராளமான மீட்டுங்களைப் போட்டு, செல்போன்- டிஎன்ஏ ஆதாரங்களை சேகரித்து, பல நாடுகளுடன் பேசி, அதே நேரத்தில் இந்த எல்லா தகவல்களையும் மிக ரகசியமாக வைத்திருந்து இவனை கோழி அமுக்குவது மாதிரி அமுக்கியதில் ப.சிதம்பரம் மிக அட்டகாசமாக செயல்பட்டுள்ளார்.

இவனை கராச்சியைச் சேர்ந்த சிகார்பூர் பகுதியைச் சேர்ந்தவன் போல போலி பாஸ்போர்ட் எடுத்துக் கொடுத்ததில் பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐக்கு முக்கிய பங்கிருக்கலாம் என சிதம்பரம் சந்தேகிக்கிறார். மேலும் செளதியில் இவனுக்கு வேலை வாங்கித் தந்ததிலும் கூட பாகிஸ்தானின் கை இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

டெல்லியில் ரகசிய இடத்தில் வைத்து அபு ஜிண்டாலிடம் இந்திய உளவுப் பிரிவினர் நடத்திய விசாரணைகளில் பல விவரங்கள் தெரியவந்துள்ளன. மும்பை தாக்குதலின்போது பாகிஸ்தானில் இருந்து தீவிரவாதிகளை வழி நடத்த அமைக்கப்பட்ட கண்ட்ரோல் ரூம் கராச்சியில் இருந்ததும் தெரியவந்துள்ளது.

ஜின்னா சர்வதேச விமான நிலையத்தின் அருகே மாலிர் கண்டோன்மென்ட் பகுதியில் பலத்த ராணுவ பாதுகாப்பு மிகுந்த இடத்தில் தான் இந்த கண்ட்ரோல் ரூம் இருந்ததாகவும், அங்கு லஷ்கர்-ஏ-தொய்பாவினர் 5 பேரையும் தன்னையும் தவிர பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த சாஜித் மீர் என்பவரும் இருந்ததாகத் தெரிவித்துள்ளான்.

இந்த சாஜித் மீர் தான் மும்பை தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்திய ஐஎஸ்ஐ-ராணுவ புள்ளி என்று இந்தியா சந்தேகிக்கிறது.

இவருடன் இருந்த லஷ்கர் அமைப்பினரின் பெயர்களும் ஜிண்டால் மூலம் தெரியவந்துள்ளன. இதில் முக்கியமான நபர் சகி உர் ரஹ்மான் லக்வி.

4 லேப்டாப்கள் உதவியோடு இன்டர்நெட் போன் (voice-over internet protocol -VOIP) மூலமும், சாட்டிலைட் போன்கள் மூலமும் மும்பையில் தாக்குதல் நடத்திய கசாப் உள்ளிட்ட 10 தீவிரவாதிகளுடனும் இவர்கள் தொடர்பில் இருந்துள்ளனர்.

சரி, மும்பை தாக்குதலில் அபு ஜிண்டாலின் தொடர்பு எப்படி இந்திய உளவுப் பிரிவினருக்குத் தெரிய வந்தது?

2010ம் ஆண்டு மும்பை ஜெர்மன் பேக்கரியில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பிடிபட்ட லால் பாபா முகம்மத் ஷேக் என்ற லஷ்கர் தீவிரவாதி தான் முதன் முதலாக ஜிண்டாலைப் பெயரைக் கூறினான். அவன் தந்த தகவலை வைத்தே ஜிண்டாலை மும்பை போலீசார் தேட ஆரம்பித்தனர். அப்போது தான் அவனது குடும்பத்தினரை போலீசார் அடையாளம் கண்டதோடு ரத்த மாதிரிகளை சேகரித்து டிஎன்ஏ ரிப்போர்ட்டையும் தயார் செய்தனர்.

English summary
Syed Zabihuddin Ansari alias Abu Jundal, like other masterminds of 26/11, would have remained safe from the law had it not been for his determination to start a fresh terror campaign against India. Determined to recruit fresh hands for terror acts against India, the resolute jihadi created a website to lure youth from India. Sources close to the investigation said Jundal committed the mistake, fortunately so from the Indian viewpoint, of using the same site to interact with his accomplices in the Lashkar establishment who have been under heightened global scrutiny since 26/11 and the disclosures of Pakistan-born American jihadi, David Headley.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter