
பெங்களூர்: கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவை மாற்றாவிட்டால் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக 7 கர்நாடக அமைச்சர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
கர்நாடக முதல்வர் சதானந்த கவுடாவை இன்று மாலைக்குள் மாற்றிவிட்டு புதிய முதல்வராக எதியூரப்பாவின் ஆதரவாளர் ஜெகதீஷ் ஷெட்டரை நியமிக்க வேண்டும் என்பது 7 அமைச்சர்களின் கோரிக்கை.
இன்று காலை 7 அமைச்சர்களும் ஜெகதீஷ் ஷெட்டரின் இல்லத்தில் ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் முன்னாள் முதல்வர் எதியூரப்பாவை நேரில் சந்தித்து இன்று மாலைக்குள் சதானந்த கவுடாவை மாற்றாவிட்டால் ராஜினாமா செய்ய முடிவு எடுத்துள்ளது குறித்து தெரிவித்தனர். எதியூரப்பாவும் அவர்களது நிலைப்பாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
சுரங்க முறைகேட்டில் சிக்கி சிறைக்குப் போய் வெளியே வந்தது முதல் தமக்கு மீண்டும் முதல்வர் பதவி வழங்க வேண்டும் என்று எதியூரப்பா ஓராண்டாக போர்க்கொடி தூக்கி வந்தார். ஆனால் அது பலனளிக்காமல் போகவே தற்போது ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்கிவிட துடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் 7 அமைச்சர்களின் ராஜினாமா மிரட்டல் கர்நாடக அரசியலில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பாரதிய ஜனதா மேலிடமும் கர்நாடக அரசியலில் தொடரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் முதலமைச்சரை மாற்றும் முடிவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது..


















