
சென்னை: புதுச்சேரியில் 2 நாள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் மன்மோகன்சிங் இன்று சென்னை வருகை தந்தார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் தலைமை செயலர், அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், மற்றும் திமுக உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன் உள்ளிட்டோர் பிரதமர் மன்மோகன் சிங்கை வரவேற்றனர்
இதனையடுத்து பிரதமர் மன்மோகன் சிங் ஹெலிகாப்டர் மூலம் புதுவைக்கு புறப்பட்டுச் சென்றார். இன்றும் நாளையும் புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார்.
நாளை புதுச்சேரி பயணத்தை முடித்துக் கொண்டு முற்பகல் 11.55 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். பின்னர் பிற்பகல் 12.10 மணிக்கு தனி விமானத்தில் சென்னையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
மன்மோகனின் பயணத்தையொட்டி சென்னை விமான நிலையத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


















