
நெல்லை: நெல்லை நகரில் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுக் கைதான 500 திமுகவினரும் மாலையில் திடீரென விடுவிக்கப்பட்டு விட்டனர். இதனால் திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று காலை திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 1 லட்சம் பேருக்கும் மேல் கைதாகியுள்ளதாக திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதேசமயம், அவ்வளவு பேர் கைதாகவில்லை, 70,000 பேர் வரை கைதாகியிருப்பதாக அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
கைதானவர்கள் ஆங்காங்கே திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை சிறையில் அடைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் நெல்லையில் அதிரடியாக கைதான 500 பேரையும் திடீரென போலீஸார் விடுவித்து விட்டனர்.
நெல்லை நகரில் இன்று காலை 500 பேர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஒரு திருமண மண்டபத்தில் போலீஸார் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்களை மாலையில் போலீஸார் விடுவித்து விட்டனர்.
இது திமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தங்களது விடுவிப்பை எதிர்த்து அவர்கள் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.





















