
மதுரை: மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்பட மொத்தம் 5 இடங்களில் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மத்திய அமைச்சரும், தென் மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி பங்கேற்கவில்லை.
மதுரை நகர்ப் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மட்டும் போராட்டம் திட்டமிடப்பட்டது. அதேபோல புறநகர்ப் பகுதிகளில் மொத்தம் 4 இடங்களில் போராட்டம் நடந்தது.
இந்த ஐந்து போராட்டங்களிலும் மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லை. வாடிப்பட்டியில்நடந்த போராட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக போராட்டத்திற்கு நகர செயலாளர் கோ.தளபதி தலைமை தாங்கினார்.
இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சர் மு.க.அழகிரி போராட்டத்திற்கு வராதது திமுகவினர் மத்தியி்ல பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.










