
சென்னை: திமுகவினரின் சிறை நிரப்பும் போராட்டம் இந்த அளவுக்கு எழுச்சியுடன் நடைபெற அதிமுக ஆட்சியும், அவர்களுக்குத் துணையாக இருக்கக் கூடிய காவல்துறையும், அதிமுக ஆட்சிக்கு துதி பாடிக் கொண்டிருக்கும் சில பத்திரிகைகளுமே காரணம். இதற்காக அவர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறோம். இப்போராட்டத்திற்கு 2 லட்சம் திமுகவினர் திரண்டனர். அவர்களை சிறையில்அடைக்க இடம் இல்லாததால் விடுவித்துள்ளனர் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், இந்தப் போராட்டம் பெரும் எழுச்சியுடன் நடைபெறுகிறது. இதற்கு அதிமுக அரசும், அவர்களுக்குத் துணையாக இருக்கக் கூடிய காவல்துறையும், ஆட்சியாளர்களுக்கு துதி பாடிக் கொண்டிருக்கும் சில பத்திரிகைகளுமே காரணம். கடந்த ஒரு வாரமாக நாங்கள் செய்த பிரசாரத்தை விட அவர்கள் செய்த பிரசாரம்தான் அதிகம். அவர்களுக்கு நன்றி.
இந்தப் போராட்டத்தை சீர்குலைக்க திட்டமிட்டு சதி செய்து வந்தனர். அதுவே எங்களது அறப் போராட்டம் மிகப் பெரிய வெற்றி பெற்றற்கு முக்கியக் காரணம். இதற்கு மேலும் பொய் வழக்குகள் போடுவதை, குணட்ர் சட்டத்தைப் பிரயோகிப்பதை அரசு நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.
இந்தப் போராட்டம் எங்களுக்கானது மட்டுமல்ல,மக்களின் இன்னல்களுக்கும் முற்றுப்புள்ளி வர வேண்டும் என்பதற்காகவும் போராடுகிறோம் என்றார் ஸ்டாலின்.
2 லட்சம் பேர் திரண்டனர்
பின்னர் மாலையில் ஸ்டாலின் உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். அப்போது செய்தியாளர்களிடம் ஸ்டாலின் பேசுகையில், இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்த அத்தனை தொண்டர்களுக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இந்தப் போராட்டத்தில் 2 லட்சம் பேர் திரண்டு வந்து கலந்து கொண்டனர். இதை அரசு எதிர்பார்க்கவில்லை.இத்தனை பேரையும் அடைக்க தமிழக சிறைகளில் இடமில்லாத காரணத்தால்தான் இப்போது அனைவரையும் விடுவித்துள்ளனர் என்று கூறினார் ஸ்டாலின்.


















