
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் மணல் லாரி உரி்மையாளர்களின் காலவரையற்ற வேலை நிறுத்தம் நேற்று நள்ளிரவு முதல் தொடங்கியது.
குமரி மாவட்டத்தில் இயங்கும் சுமார் 800க்கும் மேற்பட்ட மணல் லாரிகள் திருச்சி, கரூர், ஈரோடு உள்ளிட்ட வடமாவட்டங்களில் இருந்து மணல் எடுத்து வருகின்றன. அவ்வாறு கொண்டு வரப்படும் மணலை கடத்தல் கும்பல் வருவாய்த்துறை, காவல்துறை உதவியுடன் லாரிகளில் கேரளாவுக்கு கடத்திச் செல்கின்றன. அவர்களுக்கு எந்தபிரச்சனையும் இல்லை.
ஆனால் முறையாக பாஸ் வைத்து தொழில் நடத்துகின்ற லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கொண்டு வரும் மணலை கடத்தல் என்று கூறி வருவாய்த்துறையினர் லாரிகளை பறிமுதல் செய்கின்றனர். வருவாய்த்துறை மற்றும் காவல் துறையினரின் இதுபோன்ற நடவடிக்கைகளை கைவிடக்கோரி குமரி மாவட்ட மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று நள்ளிரவு முதல் மணல் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 800க்கும் மேற்பட்ட லாரிகள் ஓடவில்லை.










