
இறப்பதற்கு முன்பு கண்டிப்பாக சாப்பிட்டேயாக வேண்டிய உணவுகள் வரிசையில் மசாலா தோசைக்கும் இடம் கொடுத்துள்ளது ஹப்பிங்டன் போஸ்ட் இதழ்.
இந்த இதழ் நடத்திய கருத்துக் கணிப்பின் மூலம் தோசைக்கு இந்த கெளரவம் கிடைத்துள்ளது. பல்வேறு நாடுகளுக்கும் சுற்றுலா சென்ற அனுபவம் படைத்த ஒருவர் இந்த உணவு வகைகளைத் தொகுத்துள்ளார்.
இந்தப் பட்டியலில் தென்னிந்தியாவின் புகழ் பெற்ற மசாலா தோசை தவிர, சீனாவின் பீகிங் டக், அமெரிக்காவின் பிபிக்யூ ரிப்ஸ், ஜப்பானின் டெபன்யாகி ஆகியவையும் இடம் பெற்றுள்ளன.
மசாலா தோசை குறித்து அந்த எழுத்தாளர் கூறுகையில், அரிசி மற்றும் மசாலாவால் ஆன இந்த தோசை மிகவும் சுவையானதாக இருக்கிறது. நசித்த உருளைக் கிழங்கையும், வெங்காயத்தையும் இந்த தோசைக்குள் புதைத்து சுருட்டி கொடுக்கிறார்கள். கூடவே அருமையான சட்னியும் தருகிறார்கள். மிக மிக அருமையான உணவு இது. கண்டிப்பாக ஒருவர் தனது ஆயுட்காலத்திற்குள் இதைச் சாப்பிட்டாக வேண்டும், அவ்வளவு ருசியான உணவு இது என்று வாயில் எச்சில் ஒழுக எழுதியுள்ளார்.





















