
மென்லோ பார்க், கலிபோர்னியா: பேஸ்புக் ஊழியர்களுக்கான யோகா வகுப்பின்போது செல்போனை ஆப் செய்யாமல் தொடர்ந்து மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்த பெண் ஊழியரைப் பார்த்து ஒரு மாதிரியாக கண்ணடித்ததாக பெண் யோகா ஆசிரியை மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவரை அனுப்பிய நிறுவனம் அந்த யோகா டீச்சரை டிஸ்மிஸ் செய்து விட்டது.
ஆலிஸ் வான் நெஸ் என்பவர் யோகா குரு ஆவார். கலிபோர்னியாவின் மென்லோ பார்க் பேஸ்புக் அலுவலக வளாகத்தில் அவர் ஒரு வார கால யோகா பயிற்சிக்கு அனுப்பப்பட்டார். பேஸ்புக் ஊழியர்களுக்கு அவர் யோகா கற்றுக் கொடுத்து வந்தார்.
திங்கள்கிழமை நடந்த வகுப்பின்போது அனைத்து ஊழியர்களையும் செல்போன்களை ஆப் செய்து விடுமாறு கேட்டுக் கொண்டு பயிற்சியைத் தொடங்கினார் ஆலிஸ். ஆனால் ஒரு பெண் ஊழியர் மட்டும் செல்போனை ஆப் செய்யாமல் மெசேஜ் அனுப்பிக் கொண்டிருந்தார்.
அவரைப் பார்த்து மெளனமாக கண்ணசைத்து செல்போனை ஆப் செய்யுமாறு கூறினாராம் ஆலிஸ். ஆனால் ஆலிஸ் தன்னைப் பார்த்து ஒரு மாதிரியாக கண்ணடித்ததாக புகாரைக் கிளப்பி விட்டார் அந்தப் பெண் ஊழியர்.
இதையடுத்து அந்த யோகா டீச்சரை அனுப்பிய பிளஸ் ஒன் ஹெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனம் ஆலிஸை யோகா டீச்சர் பொறுப்பிலிருந்து டிஸ்மிஸ் செய்து விட்டதாம்.





















