மதுரை: மதுரை அருகே சைக்கிள் ஓட்டி பழக சென்ற 1 சிறுமியும், 2 சிறுவர்களும் கண்மாயில் இறந்து மிதந்த நிலையில் மீட்கப்பட்டனர். இவர்கள் 3 பேரும் கொலை செய்யப்பட்டு கண்மாயில் வீசப்பட்டார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் ஊமச்சிக்குளத்தை அடுத்த இ.பி.காலனியில் வசிப்பவர் சிவக்குமார். வெளிநாட்டில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கார்த்திகா(12) என்ற மகளும், மதன்(9) என்ற மகனும் இருந்தனர். அதே பகுதியில் உள்ள பள்ளியில் கார்த்திகா 7ம் வகுப்பும், மதன் 5ம் வகுப்பும் படித்து வந்தனர்.
சிவக்குமாரின் வீட்டிற்கு அருகே வசித்து வருபவர் கார்த்திகேயன். மருத்துவ விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்த இவருக்கு பிரவீன்குமார்(12) என்ற மகன் இருந்தார். கார்த்திகா, மதன், பிரவீண்குமார் ஆகிய 3 பேரும் நண்பர்கள்.
இதே பகுதியில் உள்ள கண்மாய் அருகே நேற்று மாலை 3 பேரும் சேர்ந்து சைக்கிள் ஓட்டி பழக சென்றனர். ஆனால் இரவு நெடுநேரமாகியும், 3 பேரும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து பெற்றோர் அப்பகுதி முழுவதும் தேடி பார்த்தனர். ஆனால் குழந்தைகள் கிடைக்கவில்லை.
இதையடுத்து ஊமச்சிக்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை அய்யர்பங்களா அருகே உள்ள இ.பி.காலனி கண்மாயில் 3 குழந்தைகளின் பிணம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்த போது, காணாமல் போன கார்த்திகா, மதன், பிரவீண் குமார் ஆகிய 3 பேரும் பிணமாக மிதப்பது தெரிந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினர் வரவழைக்கப்பட்டு 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டது. அதன்பிறகு மதுரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
3 பேரையும் யாராவது கொலை செய்து கண்மாயில் வீசினார்களா அல்லது கை, கால் கழுவிய போது தவறி விழுந்து இறந்தார்களா உட்பட பல கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.










