
தனது முன்னாள் மனைவி கேத்தி பெர்ரி குறித்து பேசிய காமெடி நடிகர் ருஸ்ஸல் பிராண்ட், படு காட்டமாக அவரை விமர்சித்துப் பேசியதால் கூட்டம் நடந்த இடத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இங்கிலாந்தைச் சேர்ந்த சினிமா, நாடக, ரேடியோ நடிகர் ருஸ்ஸல் பிராண்ட். சிறந்த காமெடி நடிகரான அவர் தற்போது லாஸ் ஏஞ்சலெஸில் வசித்து வருகிறார். இவரும் நடிகை கேத்தி பெர்ரியும் கணவன், மனைவியாக இருந்தவர்கள். இப்போது பிரிந்து விட்டனர்.
2008ம் ஆண்டு முதல் முறையாக இருவரும் சந்தித்துக் கொண்டனர். அதன் பின்னர் 2009ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தனர். அங்கு ராஜஸ்தான் மாநிலம் ரந்தாம்போர் புலிகள் சரணாலயத்தில் வைத்து இருவரும் தங்களது காதலைப் பரிமாறிக் கொண்டனர், நிச்சயமும் செய்து கொண்டனர். அதன் பின்னர் 2010ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி இதே புலிகள் சரணாலயம் அருகே இவர்களது திருமணம் முற்றிலும் இந்து முறைப்படி நடந்தது.
ஆனால் சரியாக 14 மாதங்கள் கழிந்த நிலையில் சரி செய்யப்பட முடியாத கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாக கூறி இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். கடந்த பிப்ரவரி மாதமே இருவருக்கும் விவாகரத்து கிடைத்து விட்டது. இருப்பினும் கலிபோர்னியா மாகாணச் சட்டப்படி ஆறு மாதம் இவர்கள் இருவரும் உறுதி உத்தரவுக்காக காத்திருக்க வேண்டும். இந்த ஆறு மாத காலம் இம்மாதத்துடன் முடிவடைகிறது. அதன் பிறகு இருவரும் சுதந்திரப் பறவைகளாகி விடுவார்கள்.
இந்த நிலையில்தான் கேத்தி பெர்ரி குறித்து சற்று மோசமான விமர்சனத்தை வெளியிட்டுள்ளார் பிராண்ட். அமெரிக்க டிவியில் அவர் தொகுத்து அளித்து வரும் பிராண்ட் எக்ஸ் என்ற நிகழ்ச்சிக்கான ஒளிபரப்பின்போது நிகழ்ச்சி பங்கேற்பாளர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தபோதுதான் இப்படி ரியாக்ட் செய்தார் பிராண்ட்.
சோலார் ஸ்டூடியோவில் இந்த நிகழ்ச்சிக்கான ஒளிப்பதிவு நடந்தது. அப்போது, கர்டிஸ் மற்றும் கேத்தி ஆகிய தம்பதிகள் கேத்தி பெர்ரியுடனான வாழ்க்கை குறித்து பிராண்டிடம் கேட்டனர்.
அப்போது பதிலளித்துக் கொண்டிருந்த பிராண்ட் திடீரென சற்று உரத்த குரலில், எல்லாம் போதும், கேத்தி போன்றோரால், எனக்கு கடந்த வருடம் அந்த வலி (ass-ache) வந்ததுதான் மிச்சம் என்று கூறினார். அவரது பதிலைக் கேட்டதும் அரங்கில் கூடியிருந்தோர் சற்று அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
அவர் தனது மனைவி கேத்தி பெர்ரி குறித்துத்தான் இப்படிப் பேசியதாக கூறப்படுகிறது. தான் பேசியது குறித்து உணர்ந்த பிராண்ட் பின்னர் சுதாரித்துக் கொண்டு அடுத்த கேள்விக்குப் போனார்.









