
துபாய்: துபாய் கடல் பகுதியில் அமெரிக்க கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதில் பலியான தமிழக மீனவர் சேகரின் உடலை விரைவில் தாயகம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக இந்திய தொழிலாளர் நல கன்சல் எம்.பி. சிங் ‘தட்ஸ் தமிழ்' செய்தியாளரிடம் தெரிவித்தார்.
துபாயில் மீன்பிடி நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வந்த ராமேஸ்வரத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் கடலில் மீன் பிடிக்கையில் அமெரிக்க கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ராமேஸ்வரம் கரையூரைச் சேர்ந்த முத்து முனிராஜ், தொண்டி அருகே உள்ள முள்ளிமுனையைச் சேர்ந்த முத்துகண்ணன், முருகன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் பலியான சேகரின் உடலை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக இந்திய தொழிலாளர் நல கன்சல் எம்.பி. சிங்க் ‘தட்ஸ் தமிழ்' செய்தியாளரிடம் தெரிவித்தார். பலியான மீனவர் குடும்பத்தினருடன் தான் தொடர்பில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
துபாய் மற்றும் வட அமீரகத்தில் இந்திய தொழிலாளர்களின் நலன் காப்பதற்காக சிறப்புறச் செயல்பட்டு வருபவர் எம்.பி. சிங். இந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணைக்கு உத்தரவிடக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.





















