ஜான்சிபர்: தான்சானியா நாட்டின் ஜான்சிபர் அருகே படகு விபத்துக்குள்ளானதில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் பலரைக் காணவில்லை என்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தான்சானியா தலைநகர் டார் எஸ் சலாமில் இருந்து ஜான்சிபர் நகருக்கு 290 பேரை ஏற்றிக் கொண்டு படகு ஒன்று புறப்பட்டது. நள்ளிரவு நேரத்தில் தீவுப் பகுதியில் வீசிய கடும் காற்றில் சிக்கிய படகு திடீரென தண்ணீரில் மூழ்கியது. இதனால் 30 குழந்தைகள் உட்பட 290 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.
படகு மூழ்கிய சம்பவத்தைக் கேள்விப்பட்ட மீட்புக் குழுவினர் விரைந்து சென்று நூற்றுக்கும் மேற்பட்டோரை உயிரோடு மீட்டனர். இருப்பினும் இதுவரை 68 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மேலும் பலரையும் காணவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
தான்சானியா நாட்டில் தீவுகளுக்கு இடையேயான இத்தகைய படகுப் போக்குவரத்தால் அடிக்கடி விபத்துகள் நடைபெறுகின்றன. கடந்த செப்டம்பர் மாதத்தில் 200க்கும் மேற்பட்டோர் படகு விபத்து ஒன்றில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இது கடந்த ஒரு வருடத்தில் நடந்த இரண்டாவது மிகப்பெரிய படகு விபத்தாகும். தீவுக் கூட்டங்களுக்கிடையே நடைபெறும் இந்த படகு போக்குவரத்தால் கடந்த செப்டம்பரில் 200க்கும் மேற்பட்டோர் இறந்தது குறிப்பிடத்தக்கது.

















