ஈரோடு: ரயிலில் கைதியை தப்பவிட்ட மூன்று காவலர்களை ஈரோடு எஸ்.பி. பொன்னி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.
நெல்லை மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் ராஜா (26). அவர் மீது வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் உள்ளது.
ஈரோடு காவல் நிலையத்தில் மட்டும் அவர் மீது 4 வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக ராஜா கைது செய்யப்பட்டுக் கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நெல்லை மாவட்டம் வள்ளியூர் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு விசாரணைக்காக ராஜாவை ஈரோடு ஆயுதப்படை காவலர்கள் சுரேஷ், குணசேகரன், தர்மலிங்கம் ஆகியோர் நெல்லைக்கு ரயில் மூலம் அழைத்துச் சென்றனர்.
அங்கு விசாரணை முடிந்த பிறகு அவரை மீண்டும் ஈரோட்டிற்குக் கோவை-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயிலில் அழைத்து வந்தனர். அப்போது திண்டுக்கல் ரயில் நிலையத்தில் கைதி ராஜா மின்னல் வேகத்தில் தப்பியோடி மறைந்துவிட்டார். இதையடுத்து அவர் தப்பியோடியது குறித்து திண்டுக்கல் ரயில்வே போலீசாரிடம் புகார் கொடுக்கப்பட்டது. அவர்கள் இது குறி்த்து வழக்குப் பதிவு செய்து ராஜாவை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் கைதியை தப்பியோடவிட்ட ஆயுதப்படை காவலர்கள் சுரேஷ், குணசேகரன், தர்மலிங்கம் ஆகிய மூவரையும் ஈரோடு எஸ்.பி. பொன்னி சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.





















