
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் பி.குணசேகரன் வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான உத்தரவை ஆளுநர் கே.ரோசய்யா பிறப்பித்துள்ளார். இதைத் தொடர்ந்து சென்னை வந்த பேராசிரியர் குணசேகரன் முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக உள்ள பேராசிரியர் குணசேகரன், தற்போது பல்கலைக்கழக, உயிரி அறிவியல் பள்ளியின், மரபியல் துறையின் தலைவராகவும், முதுநிலை பேராசிரியராகவும் இருக்கிறார்.
கடந்த மார்ச் மாதம் இவர் உயிரி அறிவியலில் டாக்டர் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை மாவட்டம் கொடிமங்கலத்தைச் சேர்ந்தவரான பேராசிரியர் குணசேகரன், மெட்டாஜெனாமிக்ஸ், பயோபிராஸ்பக்டிங், மூலக்கூறு உயிரியல், ஜீனோமிக்ஸ் உள்ளிட்டவற்றில் ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார்.
மெக்சிகோவின் ஆட்டோனோமா மெட்ரோபாலிட்டினா பல்கலைக்கழகத்தின் பயோ டெக்னாலஜி துறையின் அழைப்புப் பேராசிராயராக செயல்பட்டுள்ளார்.
தனது பட்டப் படிப்பை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முடித்தவரான பேராசிரியர் குணசேகரன், ஹரியானா விவசாயப் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி பட்டம் பெற்றார். மைக்ரோபயாலஜியில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். பல்கலைக்கழகத்தின் முது நிலை பேராசிரியராகவும் இருந்து வருகிறார்.
பல்வேறு உலகப் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் விசிட்டிங் பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரியவர்.
2009ம் ஆண்டு நடந்த 76வது இந்திய அறிவயில் மாநாட்டில் புகழ் பெற்ற விஞ்ஞானி விருதினைப் பெற்றுள்ளார். அது போக இந்திய அப்ளைட் மைக்ரோபயாலஜிஸ்ட்டுகள் அமைப்பின் வாழ்நாள் சாதனையாளர் விருதினையும் பெற்றுள்ளார். இது போக தமிழ்நாடு விஞ்ஞானி விருது, லூயிஸ் பாஸ்டியர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள், பெல்லோஷிப் ஆகியவற்றையும் பெற்றுள்ளார்.










