சென்னை: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் படைத்தளபதி கேப்டன் லட்சுமி சாகல் மரணம் அடைந்ததற்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது,
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உருவாக்கிய இராணுவத்தில் கேப்டனாகப் பணியாற்றிய பெருமைமிக்க லட்சுமி சாகலின் மறைவு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. டாக்டருக்கு படித்து ஏழைகளுக்கு தனது இறுதிக்காலம் வரை மருத்துவ சேவை புரிந்து வந்தவர் கேப்டன் லட்சுமி.
இந்திய தேசத்தின் மீது மாறாத பற்று கொண்ட அவர் நேதாஜியின் தேசிய இராணுவத்தில் ஆயுதம் ஏந்தி பெண்கள் பிரிவில் தலைமை ஏற்றுப் பெண்களுக்கெல்லாம் நாட்டுப்பற்றை ஏற்படுத்துவதில் முன்னோடியாகத் திகழ்ந்தார்.
சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் நடைபெற்ற நேதாஜியின் பிறந்தநாள் விழாவில் கேப்டன் லட்சுமி கலந்து கொண்டதை இந்த நேரத்தில் பெருமையாகக் கருதுகிறோம். நாட்டுப்பற்று, மக்கள் சேவைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்ந்த அவரது இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.










