Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

ஜனாதிபதி தேர்தலில் 52 பேர் செல்லாத ஓட்டுபோட்டது வெட்கமாகவும், வருத்தமாகவும் உள்ளது- கருணாநிதி

Posted by:
Published: Friday, July 27, 2012, 9:49 [IST]

 Invalid Vote Cast During Prez Poll Shameful Regrettable

சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் 52 பேர் செல்லாத ஓட்டுபோட்டது வெட்கமாகவும், வருத்தமாகவும் உள்ளது என்று திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள கேள்வி, பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது,

கேள்வி: குடியரசுத் தலைவர் தேர்தலில் விழுந்துள்ள செல்லாத வாக்குகள் பற்றி?

பதில்: வெட்கமாகவும், வருத்தமாகவும் உள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்தவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், சட்டப்பேரவை உறுப்பினர்களும்தான் அப்படி வாக்களித்தவர்களில் 52 பேர் செல்லாத வாக்கு அளித்திருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில் நான்கு பேர் செல்லாத வாக்கு அளித்துள்ளார்கள். இது வருத்தத்திற்குரிய செய்தி தானே?

கேள்வி:
தமிழக அரசின் காவல்துறை நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறதே?

பதில்: நெல்லை மாவட்டம், நாங்குநேரியில் இரண்டாவது நாளாக பதற்றம் நீடிக்கிறதாம். கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பள்ளிகளுக்கு விடுமுறை. என்ன காரணம் தெரியுமா? சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறை இன்ஸ்பெக்டர் விஜயகுமார் என்பவரால் வானுமாமலை என்பவர் சுடப்பட்டு இறந்திருக்கிறார்.

கேள்வி: தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் இலங்கைக் கடற்படை முகாம் ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாக ஒரு செய்தி வந்துள்ளதே?

பதில்:
தனுஷ்கோடி அருகே உள்ள இலங்கை கடல் பகுதியின் எல்லைப் பகுதி ஆரம்பிக்கும் 7வது மணல் தீடையில் இலங்கைக் கடற்படையினர் புதிதாக முகாம் அமைத்துள்ளனர் என்றும், அங்கே 24 மணி நேரமும் இலங்கைக் கடற்படையினர் பாதுகாப்பையும் தொடங்கியுள்ளனர் என்றும் இந்தத் தகவலை தமிழக மீனவர்கள் தெரிவித்தார்கள் என்றும் செய்தி வந்துள்ளது. இதைப் பற்றி மத்திய அரசு உடனடியாகக் கவனித்து, இது உண்மையாக இருந்தால் தக்க நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

கேள்வி: சென்னை உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்த ஒரு தீர்ப்பில், தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கிய நிலத்தை வேறு பிரிவினருக்கு மாற்றக்கூடாது என்பதற்காக உரிய சட்டம் கொண்டு வர வேண்டுமென்று சொல்லியிருக்கிறதே?

பதில்: அந்தத் தீர்ப்பினை நானும் பார்த்தேன். தமிழக அரசுக்கு வழங்கப்பட்ட நல்ல யோசனை இது.

கேள்வி: திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட அரசு அலுவலர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்று ஊரெல்லாம் பாராட்டினார்கள். ஆனால் அந்தத் திட்டத்தில் ஏதேதோ மாறுதல்களை செய்வதாக ஜெயலலிதா அறிவித்த போதிலும், அத்திட்டம் முறையாகச் செயல்படவில்லையே?

பதில்:
திமுக ஆட்சியிலே இத்திட்டத்தின்படி இரண்டு லட்சம் ரூபாய் வரை உதவி என்பதை நான்கு லட்சம் ரூபாய் என்று உயர்த்தி அறிவித்தார்கள். ஆனால் திமுக ஆட்சியில் அரசு அலுவலர்களிடமிருந்து இதற்காக மாதம் 25 ரூபாய் மட்டுமே பிடித்தம் செய்யப்பட்டது. தற்போது அந்தத் தொகையை மாதம் ஒன்றுக்கு 75 ரூபாய் என்று உயர்த்தி பிடித்தம் செய்ய ஆணை பிறப்பித்திருக்கிறார்கள்.

இந்தத் தொகையையும் போதாது என்று மாதம் ஒன்றுக்கு 150 ரூபாய் வீதம் பிடித்தம் செய்யவும், சேவை வரியென ஆண்டுதோறும் 290 ரூபாய் பிடித்தம் செய்யவும் இந்த மாதம் முதல் அதிமுக அரசு வெளியே சொல்லாமல் தொகையை உயர்த்தியிருக்கிறதாம்.

அரசு அலுவலர்களுக்கான மருத்துவக் காப்பீடு திட்டம் அதிமுக அரசினால் எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகிறது என்பதற்கு இந்த ஒரு உதாரணமே போதும் என்று கருதுகிறேன்.

கேள்வி: தமிழகத்தைச் சேர்ந்த குழந்தை பிரான்சிஸ் என்பவருக்கு 'மகசாசே' என்ற உயரிய விருது வழங்கப்பட்டிருப்பதைப் பற்றி தமிழகத்தில் உள்ள ஏடுகள் முக்கியத்துவம் கொடுத்து செய்தி வெளியிடவில்லையே?

பதில்:
குழந்தை பிரான்சிஸ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராமப்புற மகளிர் மற்றும் அவர்களது குடும்ப வாழ்க்கையில் அக்கறை கொண்டு மகளிர் முன்னேற்றத்திற்காகவும், அவர்கள் மேம்பாட்டுக்காகவும், விழிப்புணர்ச்சிக்காகவும் தொடர்ந்து பாடுபட்டதற்காக இந்த விருதினைப் பெற்றுள்ளார்.

குறிப்பாக கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் உள்ள தலித் மற்றும் ஆதிவாசி மகளிர் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றியப் பெரும்பணியை அங்கீகாரம் செய்து அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு என்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
DMK chief M Karunanidhi described as "shameful and regrettable," the number of invalid votes cast during the just concluded Presidential polls. "It is shameful and regrettable. Only MPs and MLAs had voted in the elections and 52 votes were invalid and four of them were from Tamil Nadu," he said.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
Eliminator , Feroz Shah Kotla, Delhi
Match starts at 08:00 pm IST