
பெங்களூர்: பெங்களூரில் உள்ள மது பார்கள் மற்றும் ரெஸ்டாரென்டுகளில் மது பரிமாறுவது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் பெண் ஊழியர்களுக்கு காவல்துறையினர் இடையூறு செய்ய மாட்டார்கள் என மாநகர காவல்துறை ஆணையர் ஜோதி பிரகாஷ் மிர்ஜி உறுதியளித்துள்ளார்.
இந்தத் தகவலை கர்நாடக ஹோட்டல் பார் மற்றும் ரெஸ்டாரென்ட்டுகளில் பணியாற்றும் மகளிர் நல சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த 2008ம் ஆண்டு பார்கள் மற்றும் ரெஸ்டாரென்ட்டுகளில் பெண்கள் மது பரிமாறவும், இரவில் பணியாற்றவும் அனுமதித்து கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதேபோன்ற அனுமதியை உச்சநீதிமன்றமும் அளித்துள்ளது. இருப்பினும் பெங்களூரில் உள்ள பார்களில் பெண்கள் பணியாற்றுவதற்கு போலீஸார் தொடர்ந்து தடை விதித்து வந்தனர்.அது போல பணியாற்றும் பெண்களுக்கு போலீஸார் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து வருவதாகவும் புகார்கள் எழுந்தன.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து இச்சங்கத்தினர் போலீஸ் கமிஷனர் ஜோதி பிரகாஷ் மிர்ஜியிடம் முறையிட்டனர். அதைப் பரிசீலித்த கமிஷனர், உயர்நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுகள் கடைப்பிடிக்கப்படும், பின்பற்றப்படும் என உறுதியளித்துள்ளார்.
முன்பு பெங்களூர் பார்களில் கிட்டத்தட்ட 2000 பெண்கள் பணியாற்றி வந்தனர். ஆனால் போலீஸாரின் தடை காரணமாக இவர்கள் அனைவரும் வேலையிழந்தனர். இருப்பினும் உச்சநீதிமன்ற மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளால் இவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனாலும் போலீஸாரின் இடையூறு தொடர்ந்ததால் இவர்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வந்தனர். இதையடுத்தே போலீஸ் கமிஷனரை இவர்களின் சங்கம் அணுகியது.
இதுகுறித்து சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜீவன் கூறுகையில், இனிமேல் போலீஸார் இடையூறு செய்ய மாட்டார்கள் என்றும் கோர்ட் உத்தரவுகள் பின்பற்றப்படும் என்றும் கமிஷனர் உறுதியளித்துள்ளார். ஆனாலும் சில உள்ளூர் காவல் நிலையங்கள் தொடர்ந்து சட்டவிரோதமாகவே நடந்து வருகின்றன என்றார்.





















