தூத்துக்குடி: தூத்துக்குடியில் இருந்து கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த 1,250 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் கடை விற்பனையாளர் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கிருஷ்ணராஜபுரத்தில் ரேஷன் கடை ஒன்று உள்ளது. அங்கு அதே பகுதியைச் சேர்ந்த ராமர் மனைவி தமிழ்செல்வி என்பவர் விற்பனையாளராக உள்ளார். எடையாளராக செல்வராஜ் என்ற செல்வின் உள்ளார். அந்த கடையில் பொது மக்களுக்கு ரேஷன் அரிசி முறையாக வழங்கப்படவில்லை. மக்கள் எப்போது சென்று கேட்டாலும் ஒரு சிலருக்கு வழங்கிவிட்டு மற்றவர்களுக்கு அரிசி வந்ததும் வழங்குவதாக தெரிவித்தனர். இது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இரவு பகலாக கடையை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் கடை முன்பு வேன் ஒன்று வந்து நின்றது. அதில் வந்தவர்கள் கடை பூட்டை திறந்து உள்ளே சென்றனர். அங்கிருந்த அரிசி மூட்டைகளை வேனில் ஏற்றத் தொடங்கினர். இதை கவனித்த பொது மக்கள் திரண்டு வந்து கடையை முற்றுகையிட்டனர். இதனால் கடத்தல்காரர்கள் திகைத்தனர். அவர்கள் வேனில் தப்பி செல்ல முயன்றனர். ஆனால் பொது மக்கள் சுற்றி வளைத்ததால் அவர்களால் தப்ப முடியவில்லை. உடனே உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் முத்துபிரேம்சாந்த் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்களைப் பார்த்ததும் கடத்தல் கும்பல் மின்னல் வேகத்தில் வேனை ஓட்டிச் சென்று தப்பித்தனர்.
இதனால் பொது மக்கள் அதிர்ந்து விலகினர். போலீசார் விடாமல் பின்தொடர்ந்து சென்றனர். தருவை அருகே உள்ள ஆனந்தமடன் பச்சேரி பகுதியில் வேனை மடக்கினர். அப்போது வேனில் இருந்தவர்கள் கீழே குதித்து தப்பியோடிவிட்டனர். டிரைவர் மட்டும் சிக்கினார். வேனில் இருந்த 1,250 கிலோ எடையுள்ள ரேஷன் அரிசையை போலீசார் கைப்பற்றினர். வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து வேன் டிரைவர் தாளமுத்து நகரைச் சேர்ந்த சண்முகவேல் என்பவர் கைது செய்யப்பட்டார். போலீ்ஸ் விசாரணையில் அரிசியை கேரளாவுக்கு கடத்த இருந்ததும், இதற்கு கடை விற்பனையாளர் தமிழ்செல்வி உடந்தையாக இருந்ததும் தெரிய வந்தது.
தொடர்ந்து ரேஷன் அரிசியை கேரளாவுக்கு கடத்த கடை சாவியை கொடுத்த தமிழ்செல்வியை போலீசார் கைது செய்தனர். அரிசி கடத்தலில் முக்கிய புள்ளியான தாளமுத்து நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ரவி, கிருஷ்ணராஜாபுரம் மாரியப்பன், கடை ஊழியர் செலவராஜ், புதியம்புத்தூர் முருகேசன் ஆகியோரை போலீசார் தேடி வருகிறார்கள்.

















