
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் உள்ள வனப்பாதையில் பக்தர்கள் கிரிவலம் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கிரிவலம் செல்வது மிகவும் பிரசித்தி பெற்றதாகும். பௌர்ணமி நாள் அன்றும், மற்ற விஷேச காலங்களிலும் பல்வேறு ஊர்களில் இருந்து வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலைப் பாதையில் கிரிவலம் செல்வது வழக்கம். மேலும் மலை அருகில் உள்ள வனப்பகுதியில் அமைந்துள்ள ஒற்றையடிப் பாதையான உள்வட்ட பாதை வழியாகவும் பக்தர்கள் கிரிவலம் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் உள்வட்ட பாதை வழியாக பக்தர்கள் கிரிவலம் செல்லவும், காப்புக்காடு பகுதிகளுக்குள் பொதுமக்கள் செல்லவும் வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் நாகநாதன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
திருவண்ணாமலை மலையை சுயம்பு வடிவாக சிவனைப் பக்தர்கள் வழிபடுகின்றனர். மலையின் புனிதத்தையும், வளத்தையும், பசுமையையும் பாதுகாப்பது வனத்துறையின் கடமை. மனிதர்களால் மலைக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்துவது, மலையின் இயற்கை சூழலை பாதுகாப்பது தான் உண்மையான ஆன்மீகம் ஆகும்.
எனவே உள்வட்ட பாதை வழியாகக் கிரிவலம் செல்வதற்கும், காப்புக்காடு பகுதிக்குள் ஆட்கள் நுழைவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிரிவலப்பாதையில் 50 இடங்களில் தடை செய்யப்பட்ட காப்புக்காடு பகுதி உள்ளது. காப்புக்காடு பகுதிக்குள் நுழைவது சட்டப்படி குற்றமாகும். இது குறித்த வாசகங்கள் அடங்கிய எச்சரிக்கை பலகைகள் விரைவில் வைக்கப்படும். தடையை மீறி உள்வட்ட கிரிவலப் பாதையிலும், காப்புக்காடு பகுதியிலும் கிரிவலம் செல்வோருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றார்.
வனத்துறையின் இந்த அறிவிப்பு பக்தர்களிடேய பெரும் கோபத்தையும், கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.










