Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

இலங்கைப் படையை ஒடுக்க தனுஷ்கோடியில் ராணுவத் தளம்... கருணாநிதி யோசனை

Posted by:
Published: Monday, August 20, 2012, 12:26 [IST]

 Karunanidhi Wants Army Base Danushk

சென்னை: தமிழக மீனவர்களை தொடர்ந்து இலங்கைப் படையினர் கொலை வெறித்தனமாக தாக்குவதைத் தடுக்கும் வகையில், தனுஷ்கோடியில் ராணுவத் தளம் அமைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி யோசனை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

கோடியக்கரை அருகே 18-8-2012 அன்றிரவு மீன் பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் பகுதி மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கடுமையாகத் தாக்கியிருக்கின்றனர். மீனவர்கள் வைத்திருந்த மீன்கள், டீசல் உள்ளிட்ட பொருள்களைக் கைப்பற்றிச் சென்றுள்ளனர்.

இந்தத் திடீர் தாக்குதலில் தமிழக மீனவர்கள் நிலைகுலைந்து போய் கதறியுள்ளனர். இந்தத் தாக்குதலில் வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி என்பவருக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவருடன் சென்ற மீனவர்கள் மகாலிங்கம், அன்பு மற்றும் பிற படகுகளில் சென்ற மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் கயிறு மற்றும் கட்டைகளால் தாக்கியிருக்கிறார்கள்.

மேலும் வானவன் மகாதேவி பகுதியைச் சேர்ந்த முருகேசன், அவருடைய தந்தை நாகப்பன், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட மீனவர்களும் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார்கள். அதில் ஒன்பது மீனவர்கள் காயமடைந்து மருத்துவமனையிலே அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு என்னுடைய கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் தமிழர்கள் இவ்வாறு அவ்வப்போது தாக்கப்படுவதும், உடனே தமிழக அரசின் சார்பில் அதைப் பற்றி மத்திய அரசிடமும், பிரதமரிடமும் முறையிடுவதும், அவர்கள் நம்மை சமாதானப்படுத்துவதற்காக இலங்கை தூதுவரிடமோ, இலங்கை அரசிடமோ அதைப் பற்றி தெரிவிப்பதும்; அவர்களும் இந்திய அரசிடம் இனிமேல் இவ்வாறு நடைபெறாது என்று உறுதி கூறுவதும்; ஆனால் அதற்கு இரண்டொரு நாட்களிலேயே இலங்கைக் கடற்படையினர் நமது மீனவர்களைத் தாக்குவதும் என்பதும் தொடர்கதையாக நீண்டு கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை.

இதுவரை நடைபெற்ற இந்திய மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையினர் தாக்குதல் என்ற புள்ளிவிவரத்தைப் பார்க்க வேண்டுமென்றால் 1991 முதல் 2011 வரை மீனவர்கள் மீது தாக்குதல் 167; 85 பேர் இறந்துள்ளனர்; 180 பேர் காயமடைந்துள்ளனர்; 2006 முதல் 2011 வரை 146 படகுகள், இலங்கை கடற்படையினரால், பறிமுதல் செய்யப்பட்டும், 746 மீனவர்கள் சந்தேக அடிப்படையில் கைது செய்யப்பட்டும் உள்ளனர். இதில் 131 படகுகள் மற்றும் 741 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் நடைபெற்ற டெசோ மாநாட்டிலேகூட இந்திய மீனவர்களின் இந்தக் கொடுமைகளை விவரிக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், இலங்கைத் தமிழர்களுக்கு பாதுகாப்பையும், நிவாரணத்தையும் உறுதி செய்யும்போது, இலங்கைக் கடற்படையினால் இந்திய மீனவர்கள் மீது தொடுக்கப்படும் கொடுமைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பது நமது இன்றியமையாக் கடமையாகிறது.

இலங்கை கடற்படையால் நிராயுதபாணிகளாக இருக்கும் அப்பாவித் தமிழக மீனவர்கள் ஈவிரக்கமின்றித் தாக்கப்படுகின்றனர்; கைது செய்யப்படுகின்றனர்; சுட்டுக் கொல்லப்படுகின்றனர்; அவர்களது மீன்பிடிப் படகுகள் மூழ்கடிக்கப்படுகின்றன; தமிழ் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுகின்றனர்.

இந்தியாவின் நிர்வாக எல்லைக்குட்பட்டிருந்த கச்சத்தீவு இலங்கை அரசு வசம் ஒப்படைக்கப்பட்டதால், மீனவர்கள் அந்தப் பகுதிக்குச் சென்றாலே இலங்கை கடற்படையினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தித் துன்புறுத்துகிறார்கள். இந்தக் கொடுமைக்கொரு முடிவு கட்ட, கச்சத்தீவை இந்தியா மீண்டும் தனது ஆளுகையின் கீழ் கொண்டு வருவதோடு தனுஷ்கோடி அல்லது மண்டபம் முகாமில் இந்தியக் கடற்படைத் தளம் ஒன்றை இந்திய அரசு நிறுவ வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது என்று சொல்லியிருக்கிறோம்.

இந்தத் தீர்மானத்தை நாம் நிறைவேற்றி ஒரு வார காலத்திற்குள்ளாகவே மீண்டும் நமது மீனவர்கள் தாக்கப்பட்டுள்ளார்கள். எனவே இதற்கொரு நிரந்தர முடிவு காண நமது இந்திய அரசுதான் முனைப்போடு செயல்பட வேண்டும். இலங்கை அரசிடம் முறைப்படி ஒரு வேண்டுகோள் விடுத்து, அவர்கள் நமக்கொரு சமாதானம் அளிப்பது என்பதோடு இந்தப் பிரச்சினை முடிந்து விடாமல், இனியொருமுறை இந்திய மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படாமல் இருப்பதற்கு உறுதியானதொரு நிரந்தர வழிவகையைக் காண வேண்டுமென்று மத்திய அரசை தி.மு.கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

English summary
DMK president Karunanidhi has urged the Indian govt to establish army base in Danushkodi to tame Lankan navy.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter