For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நபிகள் நாயகத்தை சிறுமைபடுத்தும் படத்தை தடை செய்வதோடு ஒபாமா மன்னிப்பு கேட்க வேண்டும்: திருமா

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: நபிகள் நாயகத்தை கொச்சைப்படுத்திய படத்தை தடை செய்வதோடு அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இஸ்லாம் மதத்தையும், நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட படத்தைக் கண்டித்து சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய தேசிய லீக் ஆகியவை சேர்ந்து மறியலில் ஈடுபட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தடா அப்துல் ரஹீம் ஆகியோர் தலைமையில் திரண்ட முஸ்லிம்கள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

அப்போது திருமாவளவன் கூறுகையில்,

அமெரிக்க திரைப்படம் இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அமெரிக்கா இஸ்லாமிய நாடுகளை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. எண்ணெய் வளமிக்க இஸ்லாமிய நாடுகள் மீது அரசியல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தியுள்ளது.

இஸ்லாமியர்களின் மனதை காயப்படுத்திய அந்த படத்தை தடை செய்வதோடு அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.

இது தவிர ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் அண்ணா சாலையில் உள்ள தர்கா அருகே போராட்டம் நடந்தது. அந்த கழத்தின் பொதுச் செயலாளர் காஜா மொய்தீன் தலைமையில் கூடிய 100க்கும் மேற்பட்டோர் ஒபாமாவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தனர். பின்னர் அவர்கள் ஒபாமாவின் கொடும்பாவியை எரிக்க முயன்றனர். ஆனால் அதை எரிக்கவிடாமல் அங்கு பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் தடுத்தனர்.

சுமார் 10 நிமிட போராட்டத்திற்குப் பிறகு போலீசார் அந்த கொடும்பாவியை பிடுங்கிச் சென்று அருகில் உள்ள பூங்காவில் கிழி்த்துப் போட்டனர். அதன் பிறகு போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

நபிகளை சிறுமைபடுத்தும் படத்தை தடை செய்க: சீமான்

நபிகள் நாயகத்தை சிறுமைபடுத்தும் படத்தை அமெரிக்கா தடை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

இஸ்லாமிய மக்களால் போற்றுதலுடன் கடைபிடிக்கப்படும் குர்ஆனை அருளிய இறைவனின் தூதர் நபிகள் நாயகத்தை சிறுமைப்படுத்தும் ஒரு திரைப்படத்திற்கு கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் வெளியிட அனுமதி வழங்கியுள்ள அமெரிக்க அரசின் நடவடிக்கை கண்டனத்திற்குரியதாகும்.

மானுடத்தின் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பெருமகன் ஒருவரை விமர்சனத்திற்கு உட்படுத்துகிறோம் என்கிற பெயரில் புத்தகம் வெளியிடுவது, திரைப்படம் எடுப்பது என்பது போன்ற நடவடிக்கைகள் அனைத்தும் அடிப்படையில் உள்நோக்கம் கொண்டவை என்பது கடந்த காலங்களில் உறுதியாகியிருக்கிறது.

உலக மக்கள் யாவரும் சகோதரத்துவ மனப்பான்மையுடன் ஒற்றுமையாக வாழ்ந்திட வேண்டும் என்ற நோக்குடன், ஒரு பரந்துபட்ட, விரிவான ஒத்திசைவுடன் வாழ்வதற்கான பன்முகத்தன்மை கொண்ட புரிந்துணர்வு வலுப்பெற்றுவரும் ஒரு சூழலில், மக்களிடையே பிளவையும், மோதலையும், வெறுப்புணர்வையும் உருவாக்கும் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அனுமதிப்பது என்பது நாகரீக சமூகத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத, நிச்சயமான உள்நோக்கம் கொண்ட செயலாகும்.

நாகரீகத்தின் உச்சாணிக்கொம்பில் இருப்பதாக பறைசாற்றிக்கொள்ளும் மேற்கத்திய நாடுகளில் இருந்து தான், மானுடத்தை பிளவுபடுத்தி மோதவிடும் இப்படிப்பட்ட படைப்புகள் வெளியாகின்றன.

ஒரு பக்கம் இஸ்லாமிய நாடுகளின் வளங்களுக்காக அவைகளோடு அரசு ரீதியிலான நட்பு பாராட்டுவதும், மறுபக்கத்தில் அந்நாடுகளின் மக்களின் உணர்வுகளை புண்படுத்தக்கூடிய படைப்புக்களை அனுமதிப்பதும் கடைந்தெடுத்த பொருளாதார சுய நல அரசியல் ஆகும். அதனை நன்கு புரிந்து கொண்டதனால் தான் உலக அளவில் அந்தத் திரைப்படத்திற்கு கடுமையான எதிர்ப்பு தோன்றியுள்ளது. இதனை அமெரிக்க அரசு புரிந்துகொண்டு, அந்தத் திரைப்படத்திற்கு தடை விதிப்பதுடன், இப்படிப்பட்ட படைப்புகள் எதிர்காலத்தில் வெளிவராமல் தடுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Naam Tamilar party chief Seeman and VCK leader Thirumavalavan want US to ban the anti-islam movie which has triggered protests all over the world.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X