For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இளையராஜாவை துரோகியாக்க முயலும் சட்டாம்பிள்ளைகள்: பேரா. சுப. வீரபாண்டியன் சாடல்

By Mathi
Google Oneindia Tamil News

Suba Veerapandian
சென்னை: கனடாவில் நவம்பர் மாதம் இசைநிகழ்ச்சி நடத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிப்பவர்களை திராவிட இயக்க தமிழர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன் சாடியுள்ளார்.

இது தொடர்பாக தமது வலைப்பூவில் அவர் எழுதியிருப்பதாவது:

இசைஞானி இளையராஜாவைத் தமிழினத் துரோகியாகக் காட்டும் முயற்சியில் இன்று சிலர் ஈடுபட்டுள்ளனர். வரும் நவம்பர் 3ஆம் நாள், கனடாவில் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நவம்பர் 27, மாவீரர் நாள் என்பது நாம் அனைவரும் அறிந்த செய்தி. மாவீரர் நாள் நினைவுகூரப்படும் கார்த்திகை மாதத்திலும், தமிழீழ மக்கள் பல்லாயிரக்கணக்கில் அழிக்கப்பட்ட வைகாசி (மே) மாதத்திலும் உலகெங்கும் உள்ள தமிழர் எவரும் எவ்விதமான கொண்டாட்டங்களிலும் ஈடுபடக் கூடாது என்று புதிதாய் ஒரு விதியை தமிழ்நாட்டில் இன்று சிலர் அறிவித்துள்ளனர். அதனையொட்டிக் கனடாவில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் ஒர சாரார், இளையராஜாவின் இசை நிகழ்ச்சியைப் புறக்கணிக்குமாறு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளனர்.

1982 நவம்பர் 27 அன்று, வீரச்சாவடைந்த போராளி சங்கரின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அந்நாளை மாவீரர் நாளாக நினைவுகூரும்படி, விடுதலைப்புலிகள் அமைப்பு 1989ஆம் ஆண்டு கேட்டுக் கொண்டது. அப்போதிருந்து ஒவ்வோர் ஆண்டும் உலகம் முழுவதும் அந்நாளில் மாவீரர் நாள் நினைவு எழுச்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால் அந்நிகழ்ச்சி நடைபெறும் மாதம் முழுவதும் எவ்விதமான கொண்டாட்டங்களிலும் யாரும் ஈடுபடக் கூடாது என்று, விடுதலைப் புலிகள் அமைப்போ, அமைப்பின் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களோ ஒரு நாளும் எந்த அறிவிப்பையும் வெளியிட்டதில்லை. சென்ற ஆண்டு வரையில் அப்படி எந்த ஒரு ‘கொண்டாட்டத் தடையும்' நடைமுறையில் இல்லை. அப்படியானால், இப்போது இப்படி ஒரு புதிய சட்டத்தை உருவாக்கும் சட்டாம்பிள்ளைகள் யார், எப்போதிருந்து இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது என்பன போன்ற வினாக்கள் நம்முள் எழுகின்றன. தலைவர் பிரபாகரனே கூறாத விதிகளைப் புதிதாய்க் கூறி, அவரையும் மிஞ்சிய தலைவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ள முயல்கின்றவர்கள் யார் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

மாவீரர் நாள் என்பது அழுவதற்காக அன்று, மீண்டும் மீண்டும் எழுவதற்காக என்பதைப் புலிகளும், ஈழ மக்களும் நன்கறிவார்கள். ‘மொழியாகி, எங்கள் மூச்சாகி, நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி' என்று மொழியின் பெயரிலும், அடுத்ததாக, வழிகாட்டும் தலைவரின் பெயரிலும், அதற்கடுத்து, விழிமூடித் துயில்கின்ற மாவீரர்கள் பெயரிலும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, மீண்டும் தங்களின் இன விடுதலைக்காகத் தங்களைத் தாங்களே புதுப்பித்துக் கொள்ளும் நாள்தான் மாவீரர் நாள். ஆண்டு முழுவதும் போராளிகளையும், பொதுமக்களையும் அந்த ஈழ மண் இழந்திருந்தாலும், இயக்கத்தின் முதல் பலி நடைபெற்ற நாளை ஓர் அடையாளமாக மட்டுமே புலிகள் இயக்கம் அறிவித்தது. மாவீரர்கள் இறந்த நாளில் எல்லாம் கொண்டாட்டங்கள் கூடாது என்றால், ஆண்டின் எந்த ஒரு நாளிலும் நாம் எந்த மகிழ்வையும் வெளிக்காட்ட இயலாது. அங்கே மாவீரர்கள் சாகாத நாளுமில்லை, மாவீரர்கள் இல்லாத வீடுமில்லை. ஆதலால், அடையாளமாகத்தான் சிலவற்றை நாம் செய்ய முடியும். அதுதான் நடைமுறை இயல்பு. அதனைப் புலிகள் அமைப்பும், தலைமையும் தெளிவாக அறிந்திருந்தனர்.

ஆனால், இந்த உண்மையைப் புரிந்து கொள்ளாமலோ, புறந்தள்ளியோ இரண்டு மாதங்களுக்கு எந்தக் கொண்டாட்டமும் கூடாது என்று சிலர் இன்று கூறுகின்றனர். மாவீரர் நாளுக்கு முந்தைய நாள், தலைவர் பிரபாகரனின் பிறந்த நாள். ஒவ்வோர் ஆண்டும், அந்த நாளை மகிழ்வுடன் கொண்டாடி விட்டுத்தான், மறுநாளை மாவீரர் நாளாக நாம் கொள்கிறோம். ‘ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்தபின்னர், வாராது போல் வந்த' அந்த மாமணியின் பிறந்தநாளையும் இனிமேல் கொண்டாடக்கூடாது என்று கூறிவிடுவார்களோ என்னவோ தெரியவில்லை. இரண்டு மாதங்கள் எந்தத் தமிழர் வீட்டிலும், திருமண நிகழ்வுகளோ, மகிழ்வான விழாக்களோ நடைபெறக் கூடாது என்று சட்டம் கொண்டு வருவார்களா என்றும் தெரியவில்லை.

இவ்வளவு வேண்டாம்... இளையராஜாவின் இசை நிகழ்ச்சி முடிந்து, பத்து நாள்களுக்குப் பிறகு வரவிருக்கும் தீபாவளியைத் தமிழ்நாட்டுத் தமிழர்களோ, தமிழ் ஈழத் தமிழர்களோ கொண்டாடக்கூடாது என்று இவர்களால் அறிவிக்க முடியுமா? பகுத்தறிவின் அடிப்படையில் இல்லாவிட்டாலும், இன உணர்வின் அடிப்படையிலாவது தீபாவளியை இந்தப் புதிய நண்பர்கள் தடுத்து நிறுத்தி விடுவார்களா? இவையெல்லாம் நடைமுறையில் நடைபெறக் கூடியதுதானா என்பதைச் சிந்திக்க வேண்டும்.

இதில் இன்னொரு வேடிக்கையான சிக்கலும் உள்ளது. நவம்பர் மாதத்தைக் கார்த்திகை மாதம் என்றும், டிசம்பர் மாதத்தை மார்கழி மாதம் என்றும் கணக்கிடுவது புலிகள் இயக்கத்தின் மரபு. ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்தளவு, நவம்பர் 15ஆம் தேதி அளவில்தான் கார்த்திகை தொடங்கும். டிசம்பர் 15வரை கார்த்திகைதான். எனவே தமிழ்நாட்டுக்காரரான இளையராஜா இசை நிகழ்ச்சி நடத்துவது, மாவீரர் நாள் கொண்டாடப்படும் கார்த்திகை மாதத்தில் அன்று, ஐப்பசி மாதத்தில்.

இப்படி எல்லாம் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பதை விட, நடைமுறைக்கு ஏற்ற, லட்சியங்களை உயர்த்திப் பிடிக்கின்ற வழிமுறைகளை மேற்கொள்வதே சரியானது என்பதை நாம் உணரவேண்டும்.

1988ஆம் ஆண்டு, ‘ஈழ மக்களைக் கொல்லாதே, இந்திய ராணுவமே திரும்பி வா' என்ற கோரிக்கையை முன்வைத்து, ‘ஈழத்தமிழர் உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பு' கையெழுத்து இயக்கம் ஒன்றை நடத்தியது. பல்வேறு துறைகளைச் சார்ந்த புகழ்பெற்ற 300 பேர் அவ்வறிக்கையில் கையொப்பமிட்டனர். நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர், முரசொலி மாறன், சுரதா, வைரமுத்து, மு.மேத்தா, சுந்தரராமசாமி, அசோகமித்திரன், ஞாநி, பாலுமகேந்திரா, கலைப்புலி தாணு உள்ளிட்ட பலர் அன்று கையொப்பமிட்டனர். அந்த வரிசையில் ஒருவராய், இளையராஜாவும் கையெழுத்திட்டிருந்தார் என்பதைப் புதிதாய்ப் புறப்பட்டிருக்கும் ஈழ ஆதரவாளர்கள் அறிவார்களா என்று தெரியவில்லை.
எப்போதும் ஈழவிடுதலை போன்ற நியாயமான கோரிக்கைகளை நோக்கி, வெவ்வேறு துறைகளிலும் உள்ள பலரையும் நாம் ஈர்க்க வேண்டும். அதுதான் அக்கோரிக்கைக்கு நாம் உண்மையாக இருக்கிறோம் என்பதற்கான அடையாளம். எல்லோரையும் அடித்துத் துரத்துவதும், துரோகிகளாகக் காட்ட முயல்வதும், நாம் முன்னெடுக்கும் கோரிக்கையின் வலிமையைக் குறைக்கும்.

தாங்கள் மட்டுமே ஈழ ஆதரவாளர்கள் என்று காட்டிக்கொள்ள முயலும் சிலரின் மலிவான உத்திதான் இது. ஈழ ஆதரவு என்பது எவர் ஒருவருக்கும் ‘மொத்தக் குத்தகைக்கு' விடப்படவில்லை என்பதைப் புதிய சட்டாம்பிள்ளைகள் புரிந்துகொள்ள வேண்டும்.

-இதுதான் சுப.வீரபாண்டியனின் தாக்குதல்!

English summary
Prof. Suba. Veerapandian who is the leader of Dravida Iyakka Thamizhar Peravai has supported Ilaiyaraja's concert at Canata in November.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X