For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதியின் 'உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்': ஜெயலலிதா

By Chakra
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை:காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை வெளியிடக் கூடாது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து வாய்மொழியாக வலியுறுத்தி சொல்லி இருப்பார்களோ என்ற சந்தேகம் பலமாக எழுந்துள்ளது. எது எப்படியோ, உபகாரம் செய்கிறேன் என்று சொல்லி உபத்திரவம் அளிக்க வேண்டாம் என்று கருணாநிதியை தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துவதோடு, இந்த விஷயத்தில் கருணாநிதி வாய் திறக்காமல் இருந்தாலே அது தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் தொண்டாக இருக்கும் என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007ல் வெளிவந்த பிறகு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, 2011 வரை இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத திமுக தலைவர் கருணாநிதி, தற்போது ''கர்நாடகம் தடுக்கும் தண்ணீரும்; தமிழகம் வடிக்கும் கண்ணீரும்!'' என்ற தலைப்பில் நீலிக்கண்ணீர் வடித்து கடித வடிவிலே அறிக்கை வெளியிட்டிருப்பதைப் பார்க்கும்போது, 'உதட்டில் வெல்லம், உள்ளத்தில் கள்ளம்' என்ற பழமொழிதான் நினைவிற்கு வருகிறது.

கருணாநிதி தனது அறிக்கையில், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு வெளிவந்தபோது, இது தமிழகத்திற்கு பாதகமானது என்று நான் அறிக்கை வெளியிட்டதாகவும், அந்த இறுதித் தீர்ப்பைத்தான் அரசிதழிலே வெளியிட வேண்டும் என்று தற்போது பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். இதுகுறித்த உண்மை நிலைமையை நான் எடுத்துரைக்க கடமைப்பட்டிருக்கிறேன்.

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 5.2.2007 அன்று வெளியிடப்பட்ட பிறகு, 19.2.2007 அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், காவிரி நடுவர் மன்றத்தில் தமிழகத்திற்கு பாதகமாக உள்ள அம்சங்களை நீக்கறவு செய்து சாதகமான தீர்ப்பினை பெறுவதற்கு சில ஆண்டுகள் பிடிக்கும் என்பதால், இந்த இடைப்பட்ட காலத்தில், தமிழ்நாட்டின் நலன் கருதி மேற்படி நதிநீர் பங்கீடு தீர்ப்பினை உடனடியாக மத்திய அரசு மத்திய அரசிதழில் வெளிவரச் செய்து, காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை எவ்வித காலதாமதமும் இன்றி நடைமுறைப்படுத்த மனப்பூர்வமான, ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.

கருணாநிதியின் முகத்தில் கரி:

இது மட்டுமல்லாமல், 15.4.2007 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பு மீது உச்ச நீதிமன்றம் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியதும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தான் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

ஆனால், திமுக சார்பில் நடுவர் மன்றத்திற்குத்தான் செல்ல வேண்டும் என்றும், தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றம் செல்லலாம் என்றும் முடிவு எடுக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்திற்கு அதிமுகவின் சார்பில் உடன்பாடு இல்லை என்று எடுத்துரைக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட்டுவிட்டால், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியாது என்று ஒரு வாதத்தை வைத்தவரும் கருணாநிதிதான் என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதிமுகவின் கருத்தினை முற்றிலும் புறக்கணித்து, முந்தைய மைனாரிட்டி திமுக அரசின் சார்பில் நடுவர் மன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்' என்ற பழமொழிக்கு ஏற்ப, 10.7.2007 அன்று காவிரி நடுவர் நீதிமன்றம் தமிழக அரசின் மனுவினை விசாரிக்க முடியாது என தெளிவாக தெரிவித்து கருணாநிதியின் முகத்தில் கரியை பூசியது.

உண்மையைத் திரித்து:

உண்மை நிலை இவ்வாறிருக்க, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமானது என்று நான் தெரிவித்தது போலவும், அந்தத் தீர்ப்பையே இன்று மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதுவது போலவும் உண்மையைத் திரித்து கருணாநிதி அறிக்கை வெளியிட்டு இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தனது அறிக்கையின் ஆரம்பத்தில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வேண்டும் என்று 20.12.2012 மற்றும் 22.12.2012 ஆகிய தேதிகளில் நான் பிரதமருக்கு கடிதம் எழுதியதாகவும், அதற்கு முன்னரே, அதாவது 17.12.2012 அன்றே நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை அரசிதழிலே வெளியிடச் செய்ய பிரதமரை வலியுறுத்த வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை தான் கேட்டுக் கொண்டதாகவும்; அதன்படி அவர்களும் பிரதமரைச் சந்தித்து முறையிட்டதாகவும்; பிரதமரும் உரிய முறையில் பரிசீலித்து ஆவன செய்யப்படும் என்று உறுதி அளித்ததாகவும் கூறியுள்ளார் கருணாநிதி.

தொடர்ந்து உறுதி:

அதிமுகவை பொறுத்த வரை, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007ல் வெளி வந்ததிலிருந்து, தமிழகத்திற்கு பாதகமாக உள்ளவற்றை உச்ச நீதிமன்றத்தில் முறையிட வேண்டும்; இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும்; காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்பதில் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகிறது.

நான் மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றவுடன், 14.6.2011 அன்று பிரதமரை டெல்லியில் நேரில் சந்தித்து இது குறித்த கோரிக்கை மனுவினை அளித்தேன். இது மட்டுமல்லாமல் 17.10.2011 அன்று இது குறித்த ஓர் கடிதத்தை பிரதமருக்கு அனுப்பினேன்.

மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு நியாயம் கிடைக்காது...

மத்திய நீர் வள அமைச்சகத்தை இதுகுறித்து கவனிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளேன் என்ற நான்கு வரி பதில் மட்டுமே பிரதமரிடம் இருந்து வந்தது. மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு நியாயம் கிடைக்காது என்பதால், இது குறித்து உச்சநீதிமன்றத்தில் 17.4.2012 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இத்தருணத்தில், காவிரி ந திநீரை கர்நாடகம் தமிழகத்திற்கு திறந்து விடுவது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு எப்போது மத்திய அரசிதழில் வெளியிடப்படும் என்ற வினாவினை எழுப்பி, இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் 5.12.2012 அன்று மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞரை கேட்டுக் கொண்டது.

இதனையடுத்து 7.12.2012 அன்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்குள் மத்திய அரசிதழில் வெளியிடப்படும் என்றும், காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவை அமைக்கப்படும் என்றும் காவிரி கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் மத்திய நீர் வள அமைச்சக செயலாளர் தெரிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தின் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் தனது 10.12.2012 நாளைய ஆணையில் பதிவு செய்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசு காலம் தாழ்த்துவதால், தமிழக விவசாயிகளின் வாழ் வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், 20.12.2012 மற்றும் 22.12.2012 தேதியிட்ட கடிதங்கள் மூலம் காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிடுவதையும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதையும் விரைவு படுத்துமாறு பிரதமருக்கு நான் மீண்டும் கடிதங்கள் எழுதினேன். 27.12.2012 அன்று நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்திலும் இது குறித்து விரிவாக எடுத்துரைத்தேன்.

இதற்கிடையில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுவிட்டால், அதிமுகவிற்கு நற்பெயர் ஏற்பட்டு விடுமே என்று அஞ்சி, திமுகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை பிரதமரை சந்திக்குமாறு கருணாநிதி கேட்டுக் கொண்டார். அதன் பேரில் அவர்களும் பிரதமரை சந்தித்துள்ளனர்.

கபட நாடகமாடி...

இந்தச் சந்திப்பின்போது காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று உண்மையிலேயே வலியுறுத்தினார்களா? அல்லது கேட்பது போல் ஒரு கபட நாடகமாடி, நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வெளியிடப்படுவதற்கு முட்டுக்கட்டை போட்டனரா என்பது புரியாத புதிராக இருக்கிறது.

ஏனெனில், திமுக வைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் உண்மையிலேயே காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று கோரியிருந்தால் அந்த கோரிக்கை எழுத்துப்பூர்வமானதாக இருந்திருக்க வேண்டும். உண்மையிலேயே எழுத்துப்பூர்வமாக இந்தக் கோரிக்கையை வைத்திருந்தால் அதனை ஊடகங்களுக்கு கருணாநிதி வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், இன்றுவரை வெளியிடவில்லை.

இதிலிருந்து, எழுத்துப்பூர்வமாக எந்த ஒரு கோரிக்கை மனுவினையும் கருணாநிதி, திமுக சார்பில் வைக்கவில்லை என்பது தெளிவாகிறது.

மத்தியிலும், மாநிலத்திலும் நான்கு ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சியில் இருந்தபோது இதுகுறித்து பிரதமரை சந்திக்க திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களை வலியுறுத்தாத கருணாநிதி, தற்போது பிரதமரை சந்திக்க வலியுறுத்தி அதன் பேரில் அவர்கள் சந்தித்து இருப்பதும்; அதே பிரச்சனை குறித்து அதிமுகவை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டு பல நாட்களாகியும் இது நாள் வரையில் நேரம் ஒதுக்கப்படாததை பார்க்கும் போதும்; 27.12.2012 அன்று நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில், இதுவரை பின்பற்றாத நடைமுறையாக, ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் 10 நிமிடங்கள்தான் பேச வேண்டும் என்றும், இந்த பத்து நிமிடங்களை,

ஆரஞ்சு விளக்கு எரியும்...

விளையாட்டுப் போட்டிகளில் காண்பிக்கப்படுவது போல் இறங்குமுகத்தில் பெரிய திரையில் திரையிட்டு காண்பித்து, 5 நிமிடங்கள் பேசி முடித்த பிறகு ஒரு சிறிய மணி அடிக்கப்படும் என்றும், எட்டு நிமிடங்கள் பேசி முடித்த பிறகு ஆரஞ்சு விளக்கு எரியும் என்றும், பத்து நிமிடங்கள் முடிந்த பிறகு சிகப்பு விளக்கு எரியும் என்றும், பின்னர் மணி அடிக்கப்படும் என்றும் பல நிபந்தனைகளை மத்திய அரசு விதித்துள்ளதைப் பார்க்கும் போதும்; எதற்கெடுத்தாலும் பிரதமருக்கு கடிதம் எழுதுவதையும், அறிக்கை வெளியிடுவதையும் வாடிக்கையாகக் கொண்டுள்ள கருணாநிதி இந்த விஷயத்தில் எந்தக் கடிதமும் எழுதாமல் வாய்மூடி மவுனியாக இருந்துள்ளதைப் பார்க்கும் போதும்;

சந்தேகம், சந்தேகம்:

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை வெளியிடக் கூடாது என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரை சந்தித்து வாய்மொழியாக வலியுறுத்தி சொல்லி இருப்பார்களோ என்ற சந்தேகம் தமிழக மக்கள் மனதில் பலமாக எழுந்துள்ளது.

எது எப்படியோ, உபகாரம் செய்கிறேன் என்று சொல்லி உபத்திரவம் அளிக்க வேண்டாம் என்று கருணாநிதியை தமிழக மக்களின் சார்பில் வலியுறுத்துவதோடு, இந்த விஷயத்தில் கருணாநிதி வாய் திறக்காமல் இருந்தாலே அது தமிழக மக்களுக்கு செய்யும் மாபெரும் தொண்டாக இருக்கும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, உச்சநீதிமன்றம் முன்பு அளித்த வாக்குறுதியை மனதில் கொண்டு, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பினை உடனடியாக மத்திய அரசிதழில் வெளியிடவும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை மீண்டும் ஒரு முறை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

English summary
Describing the situation in the districts irrigated by the Cauvery as calamitous, Chief Minister Jayalalithaa on Saturday reiterated her demand made to the Prime Minister Manmohan Singh to notify the final award of the Cauvery Water Disputes Tribunal without any delay
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X