Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

2ஜி: மன்மோகன் சிங், தயாநிதி மாறன் மீது வழக்கு பதிவா?: 30ம் தேதி நீதிமன்றம் முடிவை சொல்லும்!

Posted by:
Published: Friday, January 18, 2013, 10:39 [IST]

 Court Reserves Order Jan 30 On Comp Against Pm Maran

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றுகோரி சமூக ஆர்வலர் விவேக் கர்க் என்பவர் தாக்கல் செய்த மனு மீது ஜனவரி 30ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் டெல்லி தீஸ் ஹசாரி மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

விதிகளை திருத்தினார் தயாநிதி:

இந்த மனுவை கடந்த ஆண்டு தாக்கல் செய்த விவேக் கர்க் அதில் கூறியிருந்த முக்கிய அம்சம் இதுவே...

2ஜி ஸ்பெக்ட்ரத்தை எவ்வாறு ஒதுக்க வேண்டும் என்ற விதிகளை மத்திய அமைச்சர்கள் குழு 2006ம் ஆண்டில் உருவாக்கியது. அந்த விதிகளை 2006ம் ஆண்டில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் திருத்தினார்.

பிரதமருக்கு தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை:

இது குறித்து பிரதமருக்கு 2006ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி அவரே கடிதம் எழுதியுள்ளார். 2008ம் ஆண்டில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக ஆ. ராசா இருந்தபோது ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற, தயாநிதி மாறன் திருத்திய விதிகளே அடிப்படையாக அமைந்தன.

ஆனால், இந்த விவரத்தை குற்றப்பத்திரிகையில் சிபிஐ குறிப்பிடவில்லை. ஸ்பெக்ட்ரம் முறைகேடு நடைபெற அடிப்படை காரணமாக இருந்த தயாநிதி மாறன் மீதும், பிரதமர் மன்மோகன் சிங் மீதும் எப்ஐஆர் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சிபிஐ பதில் மனு:

விவேக் கர்க்கின் புகார் தொடர்பாக சிபிஐ பதில் அளிக்க கடந்த டிசம்பரில் நீதிபதி உத்தரவிட்டிருந்தார். கடந்த 7ம் தேதி சிபிஐ தாக்கல் செய்த பதில் மனுவில், பிரதமர் மன்மோகன் சிங், தயாநிதி மாறன் ஆகியோர் மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை. 2008ம் ஆண்டிலும், அதற்கு முன் (பாஜக ஆட்சியில்) ஸ்பெக்ட்ரம் ஒதுக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகார் மீது ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று கூறியிருந்தது.

இந் நிலையில் இந்த வழக்கு கூடுதல் நீதிபதி சங்கீதா டிங்கரா முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மோகன் பராசரன் வாதாடுகையில்,

இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரமே இல்லை:

2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்குகளை டெல்லி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றம்தான் விசாரிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை மீறும் வகையில் இந்த நீதிமன்றத்தில் விவேக் கர்க் மனு தாக்கல் செய்துள்ளார். மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரமே இல்லை.

2008ம் ஆண்டில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் நடைபெற்றதாக எழுந்த புகார் மீதும் விசாரணை நடத்தப்பட்டு, முதலாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தயாநிதி மீது எப்ஐஆர்-பிரதமர் குறித்து மெளனம்:

ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் உள்ளிட்டோர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விசாரணையில், விவேக் கர்க் அளித்த புகார் குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

அதனால், தயாநிதி மாறன் உள்ளிட்டோருக்கு எதிராக தனியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டிய அவசியமில்லை என்றார் மோகன் பராசரன் . ஆனால், தனது வாதத்தின்போது , பிரதமர் தொடர்பாக எந்தக் கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.

அந்தக் குற்றச்சாட்டு வேறு, இந்த குற்றச்சாட்டு வேறு:

இதையடுத்து விவேக் கர்க் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அஜய் கோயல் வாதாடுகையில்,
எனது கட்சிக்காரரின் புகாரை எந்தத் துறை விசாரிப்பது என்ற குழப்பம் உள்ளதால்தான் அவர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

ஏர்செல் மேக்ஸிஸ் விவகாரத்தில் தயாநிதி மாறன் மீது எப்ஐஆர் செய்ததையும், ஸ்பெக்ட்ரம் விற்பனை தொடர்பான கொள்கை முடிவை திருத்திய அவரது செயலையும் ஒப்பிடக்கூடாது. அந்தக் குற்றச்சாட்டு வேறு, விவேக் கர்க் சுமத்தும் குற்றச்சாட்டு வேறு.

தயாநிதி மாறன் உள்ளிட்டோரை காப்பாற்றுவதற்காக இந்தப் பிரச்சனையை சிபிஐ திசை திருப்புகிறதோ என்று சந்தேகம் எழுகிறது என்றார்.

இதையடுத்து இந்த மனு மீது ஜனவரி 30ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்தார்.

English summary
A Delhi court today reserved its order for January 30 on a complaint seeking registration of an FIR against Prime Minister Manmohan Singh and former Telecom Minister Dayanidhi Maran for their alleged role in the 2G scam. "Arguments have been heard. Put up for order on January 30," Special Judge Sangita Dhingra Sehgal said after hearing the arguments from the CBI as well as the complainant Vivek Garg.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
IPL, Rajiv Gandhi International Stadium, Uppal, Hyderabad
Sunrisers won by 5 wickets