
டெல்லி: கருகும் சம்பா பயிர்களைக் காப்பாற்ற காவிரியில் 12 டி.எம்.சி. நீர் கோரி தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உடனடியாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. வரும் 28-ந் தேதிக்குப் பிறகு தமிழக அரசு முறையிடலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்துக்கான காவிரி நீர் இல்லாமல் குறுவை சாகுபடி பொய்த்தது. சம்பா சாகுபடிக்காகவது உரிய நீரைப் பெற்றுத்தர பலவகைகளிலும் தமிழக அரசு போராடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஜனவரி முதல்வாரம் காவிரி நீர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது ஜனவரி 31-க்குள் நடுவர் மன்றத் தீர்ப்பை அரசிதழில் வெளியிடுவது தொடர்பாக மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என்றும் இரு மாநிலங்களுக்கான நீர் அளவை காவிரி கண்காணிப்புக் குழு முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜனவரி 10-ந் தேதியன்று கூடிய காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் தமிழகம் கோரியபடி நீர் திறந்துவிட உத்தரவிட முடியாது என்று கைவிரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று உச்சநீதிமன்றத்தில் கருகும் சம்பா பயிரைக் காப்பாற்ற 12 டி.எம்.சி. நீரையாவது கர்நாடகா திறந்துவிட வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இம்மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஆனால் உச்சநீதிமன்றமோ இதை நிராகரித்து பிப்ரவரி 4-ந் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்தது. இருப்பினும் தமிழக அரசு சார்பில் உடனே விசாரிக்க வலியுறுத்தப்பட்டது.
மேலும் காவிரி வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளில் ஒருவரான ஜெயின் வரும் 24-ந்தேதி ஓய்வுபெறுகிறார். இதனால் அவருக்கு பதில் புதிய அமர்வு நியமிக்கப்பட்டு விசாரணை நடைபெறும். இதனால் நீதிபதி ஜெயின் ஓய்வு பெற்றதும் 26-ந்தேதி குடியரசு தின விடுமுறை வருகிறது. 27-ந்தேதி ஞாயிறு விடுமுறை. ஆகையால் 28-ந் தேதியன்று தமிழக அரசு இது தொடர்பாக புதிய அமர்வில் முறையிடலாம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


















