சென்னை: சென்னை மருத்துவமனைகளில் தானமாக பெறப்படும் இதயம் உள்ளிட்ட உடல் உறுப்புகள் உரியவர்களுக்கு பொருத்தப்படாமல் கழிவுகளாக குப்பையில் வீசப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
ஆண்டுதோறும் 250 இதயங்கள் வரை பெறப்பட்டபோதும், உடனடி மருத்துவ வசதியின்மை, தொலைவு, நோயாளிகளின் ஒத்துழைப்பு இன்மை, தானம் தருபவர் சம்மதித்தும் உறவினர்களின் ஒத்துழைப்பின்மை போன்ற காரணங்களால் இந்த இதயங்கள் வீணாகிப் போகின்றனவாம்.
இதயநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றலாம் என்ற அளவிற்கு மருத்துவம் வளர்ந்துள்ளது. தற்போது உடல் உறுப்புதானம் பற்றி விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால் மூளைச் சாவு ஏற்பட்ட பலரின் உறுப்புகள் தானம் செய்யப்படுகின்றன. அவ்வாறு தானமாக பெறப்படும் உறுப்புகள்தான் சில நாட்களில் பயன்படுத்தப்படாமல் கழிவாக வீசப்படுகிறதாம்.
1741 உறுப்புகள் கிடைத்துள்ளது
கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட புள்ளி விவரங்களின்படி தமிழகத்தில் மொத்தம் 306 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். மொத்தம் 1741 உறுப்புகள் பெறப்பட்டுள்ளன. இதில் இதயம்,52, நுரையீரல் ,13, கல்லீரல், 280, சிறுநீரகம், 563, இதய வால்வு, 350, கண்விழி, 482 மற்றும் ஒரு உடல்தானம் என்று தானங்கள் பெறப்பட்டுள்ளன. தேவையான இந்த உறுப்புகளை குறிப்பிட்ட நேரத்தில் மற்றொரு நோயாளிக்கு பொருத்தினால்தான் அவை பயனளிக்கும்.























