
சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் பொங்கல் திருவிழா நாட்களில் கிராமியக் கலைகள் என்ற பெயரில் சென்னை நகரின் தெருக்களில் களைகட்டியிருந்த சென்னை சங்கமம் கடந்த ஆண்டு காணாமல் போனது. இந்த ஆண்டு மீண்டும் 'தமிழர் திருவிழா' என்ற பெயரில் வந்திருக்கிறது.
திமுக தலைவர் கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி.யுமான கனிமொழி, சங்கமம் என்ற பெயரில் நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளை ஆண்டுதோறும் சென்னை நகரில் பொங்கல் நாட்களில் நடத்தி வந்தார். இதற்கு தடபுடலான விளம்பரங்கள், என்.ஜி.ஓ.க்களின் பங்களிப்பு என களைகட்டியிருந்தது. நாட்டுப்புறக் கலைஞர்களுக்கும் ஊதியமும் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு சங்கமம் நிகழ்ச்சி காணாமல் போனது. ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் வழக்கில் கனிமொழி சிக்கிய போது 'சங்கமம்' கலை நிகழ்ச்சிக்கான நிதி குறித்த கேள்வியும் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கனிமொழி பொறுப்பு வகிக்கும் திமுகவின் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பில் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. திமுக தலைவர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.
இந்த விழாவின் முக்கிய அம்சமாக 'தமிழர் திருவிழா' கலை நிகழ்ச்சிகள் சென்னையில் மயிலாப்பூர் மற்றும் கோட்டூர்புரத்தில் 5 நாட்கள் நடைபெறுகின்றன. மொத்தம் 200 நாட்டுப்புறக் கலைஞர்கள் இந்த கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர்.
அதாவது சங்கமம் என்ற பெயரிலான பிரம்மாண்ட நிகழ்ச்சி 'தமிழர் திருவிழா' என்ற பெயரில் சுருங்கிய அவதாரமெடுத்திருக்கிறது!


















