Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English Hindi ગુજરાતી ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயிக்கும்: மத்திய அரசு முடிவுக்கு ஜெ. கடும் எதிர்ப்பு!

Posted by:
Updated: Friday, January 18, 2013, 9:48 [IST]

 Middle Class Poor Will Be Hit Jayalalitha

கொடநாடு: டீசல் விலையையும் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் முடிவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஊழல், விலைவாசி உயர்வு, பண வீக்கம், இந்திய ரூபாயின் மதிப்புக் குறைவு, ரயில் கட்டண உயர்வு, பெட்ரோல் விலை உயர்வு என அனைத்தும் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் தறிகெட்டு சென்று கொண்டிருக்கின்ற இந்த வேளையில், டீசல் விலையை இனிமேல் எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும், ஓர் ஆண்டிற்கு ஒன்பது சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே மானிய விலையில் வழங்கப்படும் என்றும் தி.மு.க. அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அறிவித்திருப்பது எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றுவது போல் அமைந்துள்ளது.

கடும் கண்டனம்

அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில், அவ்வப்போது டீசல் விலையினை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும், சமையல் எரிவாயுவிற்கான மானியம் ஆண்டொன்றுக்கு ஒன்பது சிலிண்டர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் எடுக்கப்பட்ட முடிவு ஏழை, எளிய மக்களின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். "பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்ற பழமொழிக்கேற்ப, ஏற்கெனவே விலைவாசி உயர்வால் தத்தளித்துக் கொண்டிருக்கும் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களின் மீது மீண்டும் டீசல் உயர்வு சுமத்தப்பட்டு இருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாட்டின் உயிர்நாடி

ஒரு நாட்டினுடைய பொருளாதாரத்தின் உயிர்நாடியாக விளங்குவது டீசல் ஆகும். டீசல் விலை உயர்த்தப்பட்டால் அத்தியாவசியப் பொருட்களின் விலை, பேருந்துக் கட்டணம், வாகனக் கட்டணம் ஆகிய அனைத்துமே அதிகரிக்கும் என்பதால் தான், டீசல் விலை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை மத்திய அரசு தன் வசம் வைத்திருந்தது. இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த டீசல் விலையினை எண்ணெய் நிறுவனங்களே சர்வதேச விலைக்கு ஏற்ப நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு முடிவு எடுத்து இருப்பது, அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும், பணவீக்கத்தையும் அதிகரிக்கச் செய்ய வழி வகுக்கும்.

ஏற்க முடியாது

சர்வதேச சந்தையில் விற்கப்படும் பெட்ரோலிய பொருட்களின் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் ஆகியவற்றிற்கான விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும் என்ற கொள்கை சரியானது அல்ல. இந்தக் கொள்கையை மாற்றிட வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறிக்கொண்டிருக்கும் நிலையில், இதற்கு வழிவகை செய்யாமல், டீசல் விலை ஏற்றத்திற்கு வித்திடும் வகையில் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்ற மத்திய அரசின் முடிவு ஆரோக்கியமான பொருளாதாரத்திற்கு வழி வகுப்பதாக இல்லை.இந்திய நாட்டிற்கு தேவைப்படும் கச்சா எண்ணெயில் சுமார் 30 விழுக்காடு இந்தியாவிலேயே பெறப்படுகின்ற சூழ்நிலையிலும், 70 விழுக்காடு கச்சா எண்ணெய் மட்டுமே வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற சூழ்நிலையிலும், சர்வதேச சந்தைக்கு ஏற்ப டீசல் விலை உயர்வை சாதாரண பொதுமக்களின் மீது சுமத்துவது என்பது எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கட்டண உயர்வு அபாயம்

திமுக அங்கம் வகிக்கும் மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசின் இந்த நடவடிக்கை காரணமாக, பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் வாகனக் கட்டணங்கள்; சாலை வழியாக கொண்டு செல்லப்படும் அனைத்துப் பொருட்களின் விலைகள்; போக்குவரத்துக் கட்டணம் ஆகியவை கடுமையாக உயரக்கூடிய ஆபத்தான சூழ்நிலை உருவாகியுள்ளது.

பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசால் ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவின்படி, தற்போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை அவ்வப்போது உயர்த்திக்கொண்டு வருகின்றன. இனி இதே நிலை தான் டீசலுக்கும் ஏற்படும். இந்த நடவடிக்கையின் மூலம் அவ்வப்போது பெட்ரோலியப் பொருட்களின் விலை உயரும் என்பதும், அதன் காரணமாக பொருட்களின் விலை உயர்வு ஏற்படும் என்பதும், அதனால் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத் தரம் குறையும் என்பதும் திண்ணம்.

சிலிண்டர் எண்ணிக்கை

டீசல் விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ள இந்த முடிவிற்கு பொதுமக்களிடம் இருந்து எழும் கண்டனங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்ற நினைப்பில், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மானிய விலையிலான எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை ஓராண்டிற்கு 6 லிருந்து 9 ஆக உயர்த்தப்படும் என மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசு அறிவித்துள்ளது. ஏழை எளிய நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத எரிபொருளாக விளங்கும் எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை எவ்வித உச்ச வரம்பும் இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று அனைத்துத் தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்து வரும் இந்த நேரத்தில், மானிய விலையிலான எரிவாயு சிலிண்டர்களின் எண்ணிக்கை 6 லிருந்து 9 ஆக உயர்த்தப்படும் என்ற அறிவிப்பு ஏமாற்றமளிப்பதாக உள்ளது.

Story first published:  Friday, January 18, 2013, 8:32 [IST]
English summary
Condemning the Centre’s decision allowing state-run companies to raise diesel price from time to time, Tamil Nadu Chief Minister Jayalalithaa on Thursday demanded reversal of the policy in the interests of the common people. At present, the Centre is fixing the price.
கருத்தை எழுதுங்கள்
Click here to type in Tamil
Subscribe Newsletter
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England: 180 / 6, 59 Overs
IPL, M Chinnaswamy Stadium, Bangalore
Royal Challengers Bangalore won by 24 runs