For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடுங்கவைக்கும் அரசியல் படுகொலைகள்!.... ஒரு பார்வை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

எந்த ஒரு அரசியல் கட்சியாக இருந்தாலும் இரண்டாம், மூன்றாம் கட்ட தலைவர்களிடையே பூசல் இருப்பது வாடிக்கை. தலைமைக்கு நெருக்கமானவராகவேண்டும் என்ற ஆவலில் எத்தனையோ கொலைகள் அரங்கேறுகின்றன.

மதுரையில் வியாழன் இரவு நடைபெற்ற திமுக பிரமுகர் படுகொலை மட்டுமல்லாது இதுவரை தமிழ்நாட்டில் பல அரசியல் படுகொலைகள் அரங்கேறியுள்ளன.

2011 ஆம் ஆண்டு அக்டோபர் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற பஞ்சாயத்து அமைப்பு தலைவர்களில் 37 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.இதில் சென்னையை அடுத்த காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 13 பஞ்சாயத்து தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றனர். இதேபோன்று, ஒரு சிலர் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்கும் பலியாகியிருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற படுகொலைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

நடுங்கவைத்த லீலாவதி கொலை

நடுங்கவைத்த லீலாவதி கொலை

மதுரையில் பட்டப்பகலில் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் லீலாவதி 1997ம் ஆண்டு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் கைதான திமுகவினர் சிலர் வழக்கில் இருந்து விடுதலை ஆகியுள்ளனர்.

தா.கி. கொலை வழக்கு

தா.கி. கொலை வழக்கு

திமுக., முன்னாள் அமைச்சர் தா.கிருட்டிணன், 20.5.2003 அன்று அதிகாலை மதுரை கே.கே. நகரில் நடைப்பயிற்சிக்குச் சென்றபோது, மர்ம நபர்களால் கண்டந்துண்டமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். முன்னாள் அமைச்சராக இருந்தவரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான தா.கி. படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் இதுவரை குற்றவாளிகள் யார்? என்பது இதுவரை தெரியவில்லை.

ஆலடி அருணா கொலை வழக்கு

ஆலடி அருணா கொலை வழக்கு

திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா, அவரது நண்பரான ஆசிரியர் பொன்ராஜ் உடன் கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே நடைபயிற்சி மேற்கொண்டபோது படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு குறித்த விசாரணை நிலுவையில் உள்ளது.

பழிக்குப் பழியான பூண்டி கலைச்செல்வன்

பழிக்குப் பழியான பூண்டி கலைச்செல்வன்

திருவாரூர் திமுக மாவட்டச் செயலாளராக இருந்த பூண்டி கலைச் செல்வம் 2007ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்திலேயே வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் கொலை செய்யப்பட்டார். அதிமுக ஒன்றியச் செயலாளர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப் பழி வாங்குவதற்காகவே இந்தக் கொலை நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இந்த வழக்கின் விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் படுகொலை

அதிமுக முன்னாள் அமைச்சர் படுகொலை

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம் 2010ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி இரவு புதுக்கோட்டையில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை தீர்ப்பு அளிக்கப்படவில்லை.

விலகாத மர்மம் ராமஜெயம் கொலை வழக்கு

விலகாத மர்மம் ராமஜெயம் கொலை வழக்கு

முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் 2012ம் ஆண்டு மார்ச் 28ம் தேதி திருச்சியில் கடத்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில், குற்றவாளிகள் யார் என்பது புரியாத புதிராக உள்ளது. தற்போது, சிபிசிஐடி போலீஸ் இந்த வழக்கினை விசாரித்து வருகின்றனர்.

பொட்டு சுரேஷ் படுகொலை

பொட்டு சுரேஷ் படுகொலை

அரசியல் படுகொலைகள் வரிசையில் சமீபத்தில் இணைந்தவர் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் வலது கரம் என்று கூறப்பட்ட பொட்டு சுரேஷ். இவர் மதுரையில் வியாழக்கிழமை இரவு தனது வீட்டருகிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது கொலை வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி அட்டாக் பாண்டியின் ஆட்கள் 7பேர் சரணடைந்திருக்கின்றனர்.

அரசியல் பிரமுகர்களின் மகன்கள்

அரசியல் பிரமுகர்களின் மகன்கள்

மதுரையில் இப்போது கொலையின் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. ‘எங்கே தொட்டால் எங்கே வலிக்கும்' என்பது கூலிப்படையினருக்கு தெரிந்திருக்கிறது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு மதுரையில் அரசியல் பிரமுகர்களை விட்டுவிட்டு அவர்களின் மகன்களைக் கொல்வதை ஒருவித ஸ்டைலாக வைத்திருந்தனர். மதுரை நகர தி.மு.க. செயலாளராக இருக்கும் வேலுச்சாமியின் மகன் சில ஆண்டுகளுக்கு முன்னர், கொலை செய்யப்பட்டார். சமீபத்தில் அ.தி.மு.க. பிரமுகர் மாரிசாமியின் மகன் கொலையானார். மதுரை தி.மு.க. பகுதிச் செயலாளர் முருகனின் மகன் கொலை செய்யப்பட்டார்.

திமுகவினர்தான் அதிகம்

திமுகவினர்தான் அதிகம்

அரசியல் படுகொலைகளில் அதிகம் மரணமடைந்தவர்கள் திமுகவினர் என்பதுதான் அதிர்ச்சிகரமான உண்மை. தலைமைக்கு நெருக்கமானவராக யார் இருப்பது என்பது தொடர்பான போட்டிகள் திமுகவில்தான் அதிகம் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். பொட்டு சுரேஷ் கொலையில் இந்த உண்மையை உணர்த்தியுள்ளது.

கூலிப்படையினர் கைவரிசை

கூலிப்படையினர் கைவரிசை

முக்கிய பிரமுகர்களின் கொலைச் சம்பவங்களில் கூலிப்படையினருக்கு பெரும்பங்கு இருப்பது பல்வேறு சம்பவங்களில் தெரியவந்துள்ளது. எதிரிகளை பழிவாங்குவதற்காக கூலிப்படையினரை அதிகம் பயன்படுத்துவது அரசியல் பிரமுகர்களே என்ற குற்றச்சாட்டையும் பார்க்க முடிகிறது.

குற்றச்செயல்களை தடுக்குமா அரசு?

குற்றச்செயல்களை தடுக்குமா அரசு?

தொழில் போட்டி, முன்விரோதம், அரசியல் காழ்ப்புணர்ச்சி என பல காரணங்கள், அரசியல் பிரமுகர்களின் கொலைகளுக்குப் பின்னால் இருந்தாலும், இதுபோன்ற குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

English summary
Here is the list of political murder with rocked the TamilNadu. Most of the victims are from DMK in particular Madurai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X