
லெபனான்: ஏதாவது ஒரு பிரச்சினை என்றாலே அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் பேசக்கூடியவர்களை வைத்து விவாத நிகழ்ச்சி நடத்துவது தொலைக்காட்சிகளின் வாடிக்கை. லெபனான் நாட்டில் ஹிஸ்பொல்லா இயக்கத்துக்கு சொந்தமான சேனலின் ‘லைவ்'ஷோவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இருந்து ஒளிபரப்பாகும் அல்-மனார் டி.வி. சேனல், ஹிஸ்பொல்லா இயக்கத்துக்கு சொந்தமானது. இதில் நடைபெறும் பிரபல அரசியல் விவாத அரங்கில் கலந்து கொள்வதற்காக இரு வி.ஐ.பி.கள் அழைக்கப்பட்டிருந்தனர்.
ஒருவர் லெபனான் மீடியா போகல் சென்டர் டைரக்டர், சலீம் ஸஹ்ரான், இவர், சிரியா அரசின் ஆதரவாளர். மற்றொருவர், லெபனானின் பிரபல பத்திரிகையான அல்-ஜொம்ஹோரியாவின் அரசியல் செய்தியாளர் அசாத் பிஷாரா. இவர், சிரியாவில் அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் போராளிப் படைகளில் ஆதரவாளர்.
விவாதம் சூடாக போய்க்கொண்டிருந்தது. அப்போது, ஸஹ்ரான், "நீர் ஒரு இஸ்ரேலிய உளவாளி. உம்மை தூக்கில் போட வேண்டும்" என பிஷாராவைப் பார்த்து சொல்ல, இவர் அவரைப் பார்த்து, "நீர் சிரியா உளவுத்துறையின் ஆள்" என பதிலடி கொடுக்க, மோதல் தொடங்கியது.
உடனே ஸஹ்ரான், அவருக்கு எதிரே டம்ளரில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை எடுத்து பத்திரிகையாளரின் முகத்தில் ஊற்ற, அவர் சும்மா விடுவாரா? தமக்கு முன்பிருந்த தண்ணீர் நிரம்பிய கிளாஸை எடுத்து டைரக்டரை நோக்கி எறிய, உடனே நேரடி ஒளிபரப்பு அவசர அவசரமாக நிறுத்தப்பட்டு விளம்பரம் போடப்பட்டது.
இவர்களின் சண்டையில் சமாளிக்க முடியாமல் திணறியது என்னவோ நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்தான். சிறிது நேரத்திற்குப்பின்,
நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர், "இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு மனம் வருந்துகிறோம்" என அறிவித்தார். இதையடுத்து, அடித்துக்கொண்ட இருவரும் கைகுலுக்கிக் கொள்வதை காட்டிவிட்டு, மீதி விவாதம் நடந்து முடிந்தது.
தமிழ்நாட்டிலும் சிவசங்கர் பாபாவும், யாகவா முனிவரும் நிஜமாகவே மோதிக் கொண்ட ஆன்மீக மோதல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. நேரடி ஒளிபரப்பில், "நீ திருடன், நீ ஊரை ஏமாத்துற'' என்று இருவரும் பரஸ்பரம் திட்டிக் கொண்டு, எதிராளியின் ஆன்மீக மோசடியை கோபமான குரலில் விமர்சித்தனர். உச்சகட்டமாக தனது தோள் துண்டை சுழற்றி பாபாஜியை யாகவா முனிவர் தாக்கினார். இது அப்போது நகைச்சுவையாக பேசப்பட்டது.
இப்போதும் தமிழ்நாட்டில் சில டிவி சேனல்களின் ரியாலிட்டி ஷோக்களில் அடிதடிகள் நடப்பது சகஜம்தான். ஆனால் அது டிஆர்பிக்காக நடத்தப்படும் நாடகம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.










