
சென்னை: அவதூறு வழக்கில் வரும் ஏப்ரல் மாதம் 29ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு திமுக தலைவர் கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பற்றி முரசொலியில் அவதூறு செய்தி வெளியிட்டதாகக் கூறி அரசு வழக்கறிஞர் ஜெகன் சென்னை முதலாவது செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி பொன். கலையரசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர் முரசொலி ஆசிரியர் செல்வம், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் வரும் ஏப்ரல் மாதம் 29ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று அவர்களுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
இதே போன்று முதல்வர் ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு தேமுதிக தலைவர் விஜயகாந்த், முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கும் இன்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.










