மதுரை: தமிழகத்தை உலுக்கிய பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கொள்ளை வழக்குகளை விசாரிக்க மதுரையில் தனி நீதிமன்றம் அமைக்கப்பட இருக்கிறது.
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரத்தில் தோண்ட தோண்ட வெளிவந்த கிரானைட் ஊழல் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 50 பேர்கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் மேலூர் அருகே உள்ள நொண்டி கோவில்பட்டியை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனுவைத் தாக்கல் செய்திருந்தார். அதில் கிரானைட் முறைகேடு வழக்குகளை விரைவில் விசாரிக்கும் வகையில் தனி நீதிமன்றத்தை ஏற்படுத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
இம்மனு மீது பதிலளிக்க தமிழக அரசின் தலைமை செயலர், தொழில் துறை செயலர் ஆகியோருக்கு மதுரை ஊயர்நீதிமன்றக் கிளை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. பின்னர் நடைபெற்ற விசாரணையின் போது கிரானைட் முறைகேடுகளின் வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.


















