
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா பாணியில் காதலர் தினத்தை கொண்டாடுவது பற்றி பார்க்கலாம்.
உலக முழுவதும் இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. அமெரிக்காவில் வசிப்பவரா நீங்கள்? காதலர் தினமான இன்று உங்கள் காதலியை எங்கு அழைத்துச் சென்று அசத்தலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படி என்றால் அமெரிக்க அதிபர் ஒபாமா பாணியில் காதலர் தினத்தை கொண்டாடலாமே. அவர் தனது மனைவி மிஷலை அழைத்துச் சென்ற இடங்களுக்கு உங்கள் காதலியை அழைத்துச் செல்லலாமே...
கடந்த ஆண்டு காதலர் தினத்தன்று ஒபாமா மிஷலை அலெக்சாண்ட்ரியாவில் உள்ள வெர்மிலியன் என்ற உணவகத்திற்கு அழைத்துச் சென்றார். கடந்த 2011ம் ஆண்டு தங்களின் 19வது திருமண நாளன்றும் ஒபாமா மிஷலை வெர்மிலியனுக்கு தான் அழைத்துச் சென்றார். 2009ம் ஆண்டில் 17வது திருமண நாளன்று (வெள்ளை மாளிகைக்கு வந்த பிறகு முதன் முறையாக) பார்க் ஹயாத் ஹோட்டலில் உள்ள ப்ளூ டக் டாவர்னுக்கு சென்றனர்.
அதே ஆண்டில் காதலர் தினத்தன்று ஒரு வேளை சாப்பிட ஒபாமாவும், மனைவியும் வாஷிங்டனில் இருந்து கிளம்பி சிகாகோ சென்று அங்குள்ள டேபிள் 52ல் உணவு உண்டனர். 2010ம் ஆண்டில் கேம்ப் டேவிட்டில் அவர்கள் காதலர் தினத்தை கொண்டாடினர்.
இந்த ஆண்டு மிஷலின் 49வது பிறந்தநாளன்று அவர்கள் ஜார்ஜ்டவுனில் உள்ள கபே மிலனோவில் இரவு உணவு சாப்பிட்டனர். அவர்கள் இத்தாலிய உணவு சாப்பிட டாஸ்கா சென்றுள்ளனர். ஒபாமா அதிபரானதில் இருந்து டேட் இரவுகளில் அவர்கள் கிரீக்க உணவகமான கோமிக்கு சென்றுள்ளனர்.


















