For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சாலை விபத்தில் பலியான மாணவர்கள் ஒரே இடத்தில் அடக்கம்: மக்கள் கண்ணீர் அஞ்சலி

By Mayura Akilan
Google Oneindia Tamil News

புதுக்கோட்டை: புதுக்கோட்டை அருகே சாலை விபத்தில் பலியான 7 மாணவர்களும் ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஊர்மக்கள் அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

விஜயரகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் புதுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் உள்ள வல்லத்திராக்கோட்டையில் ராமசாமி தெய்வானை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்கள்.

விஜயரகுநாதப்புரத்தைச் சேர்ந்த முத்தையா மகன் அருண்குமார் (9-ம் வகுப்பு, சுரேஷ் மகன் சத்யா (பிளஸ்-1), சுந்தரம் மகன் மதியழகன் (பிளஸ்-2), ராஜ கோபால் மகன் நாராயணசாமி (9-ம் வகுப்பு), அண்ணாமலை மகன் விஷ்ணு (பிளஸ்-2), முத்தையா மகன் மணிகண்டன் (பிளஸ்-2), சுப்பிரமணியன் மகன் சிவக்குமார் (6-ம் வகுப்பு,) மற்றும் விக்னேஷ், ராஜேஷ்குமார் ஆகியோர் வழக்கம் போல் நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டு வந்தனர். அரசு பேருந்து நிற்காத காரணத்தால் பள்ளிக்கு நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த பால்வேனை மறித்து தங்களை ஏற்றிக் கொள்ளுமாறு டிரைவர் ஆறுமுகத்திடம் கேட்டனர். அவரும் மாணவர்களை ஏற்றிச் சென்றார்.

Pudukottai Accident

பூவரசன் குடியை அடுத்த சிமெண்ட் பாலம் அருகே பால்வேன் சென்றபோது புதுக்கோட்டை நோக்கி வந்த தனியார் பஸ் நேருக்கு நேராக வேன் மீது மோதியது. இதில் வேன் அப்பளம் போல் நொறுங்கியது.

இந்த இடிபாடுகளில் சிக்கி வேனில் பயணம் செய்த அருண்குமார், விஷ்ணு, சிவக்குமார், சத்யா, நாராயணசாமி, மதியழகன், மணிகண்டன் ஆகிய 7 மாணவர்கள் மற்றும் டிரைவர் ஆறுமுகம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மாணவர்கள் இறந்த தகவல் அறிந்ததும் பெற்றோர்களும், கிராமத்தினரும் சம்பவ இடத்திற்கு வந்து கதறி அழுதனர்.

விபத்தில் இறந்த மாணவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு பின்னர் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஒரே இடத்தில் அடக்கம்

இதையடுத்து அவர்களின் உடல்கள் விஜயரகுநாதபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கு பெரிய குழி தோண்டப்பட்டு ஒரே இடத்தில் 7 மாணவர்களின் உடல்களும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.அப்போது அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மாணவர்களின் உடல்கள் மீது மலர் தூவி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பலியான மாணவர்கள் படித்த ராமசாமி தெய்வானை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மேலும் மாணவர்களின் உடல்களுக்கு எம்.பி.க்கள் தம்பித்துரை, ப.குமார், எம்.எல்.ஏ.க்கள் கார்த்திக் தொண்டைமான், விஜயபாஸ்கர், முன்னாள் மத்திய அமைச்சர் ரகுபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராமகிருஷ்ணன் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

அரசு பஸ்களை இயக்குக

மாணவர்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன், பள்ளி மாணவர்களுக்கு அரசு இலவச பஸ் பாஸ் வழங்கியுள்ளது. ஆனாலும் அவர்களை கண்டக்டர்கள் ஏற்ற மறுக்கிறார்கள். இதனால்தான் இதுபோன்ற விபத்துக்கள் நடக்கிறது என்றார்.

அரசு பஸ் பாஸ் கொடுத்தால் மட்டும் போதாது மாணவர்கள் பள்ளிக்கு உரிய நேரத்தில் வந்து செல்ல கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும். மேலும் இந்த பகுதியில் எத்தனை மாணவர்கள் பள்ளி கல்லூரிக்கு செல்கிறார்கள் என்பதை ஆய்வு செய்து போதுமான பஸ்களை அரசு இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

தலா. 1 லட்சம் நிதி

இதனிடையே உயிரிழந்த மாணவர்கள், டிரைவர் குடும்பத்தினருக்கு தலா 1லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

புதுக் கோட்டை அருகே சாலை விபத்தில் அகால மரணமடைந்த ஏழு பள்ளி மாணாக்கர்கள் மற்றும் வாகன ஓட்டுநரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த ஏழு பள்ளி மாணாக்கர்கள் மற்றும் வாகன ஓட்டுநரின் குடும்பங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 25,000 ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 10,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

உயர்சிகிச்சைக்கு உத்தரவு

இந்த சாலை விபத்தில் மூன்று மாணவர்கள் காயமடைந்துள்ளனர் என்பதை அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்து மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்று வரும் இவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கும், புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்திற்கும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

English summary
Road accident victims, who were killed in a bad accident in Putukottai district were buried enmasse.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X