For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திவ்யா-இளவரசன் காதல் அரசியலுக்கான கருவியாக ஆக்கப்பட்டுள்ளது: சீமான் குற்றச்சாட்டு

Google Oneindia Tamil News

Seeman
சென்னை: தமிழரின் வாழ்வில் நீக்கமுடியாத ஒரு இடத்தைப் பெற்ற காதல் இன்றைக்கு தமிழினத்தை கூறுபோடும் சாதியப் பகைக்கும், தமிழினத்தின் ஒற்றுமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திவ்யா இளவரசன் காதல் அரசியலுக்கான கருவியாக ஆக்கப்பட்டுள்ளது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

தர்மபுரியைச் சேர்ந்த இளைஞர் இளவரசனின் மரணம் அவரது குடும்பத்தாருக்கு ஏற்பட்ட பெரும் துயரம் மட்டுமின்றி, காதலையும் வீரத்தையும் போற்றும் எம் தமிழ் தேசிய இனத்துக்கு ஏற்பட்ட ஒரு இழிவாகும்.

ஒரு பெண்ணிற்கும், ஒரு இளைஞனுக்கும் இடையே இயற்கையாகவும், இயல்பாகவும் ஏற்பட்ட ஒரு உறவை, சாதியமாக்கி, அரசியலாக்கியதன் விளைவு, அது முதலில் திவ்யாவின் தந்தையையும், இப்போது அவரை காதலித்து மணமுடித்த இளவரசனையும் பலி கொண்டுள்ளது பெரும் வேதனையாகும்.

தமிழர் வாழ்வில் வீரத்திற்கு இணையான உன்னத இடம் காதலுக்கு தரப்பட்டுள்ளது, நமது கல்வியில் கூட காதல் இலக்கியங்கள் இடம்பெறுகின்றன, காதலை மையக்கருவாக வைத்து வெளியான பல தமிழ்த் திரைப்படங்கள் பெரும் வெற்றி பெற்றதோடு, காலத்தால் அழியாத காவியங்களாக இன்றளவும் போற்றப்படுகின்றன.

இப்படி தமிழரின் வாழ்வில் நீக்க முடியாத ஒரு இடத்தைப் பெற்ற காதல் இன்றைக்கு தமிழினத்தை கூறுபோடும் சாதியப் பகைக்கும், தமிழினத்தின் ஒற்றுமைக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திவ்யா இளவரசன் காதல் அரசியலுக்கான கருவியாக ஆக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாளும் பல நூற்றுக்கணக்கான காதலர்கள் பெற்றோர்களின் சம்மதத்துடனும், ஆதரவுடனும் மணம் செய்து கொண்டுதான் வருகிறார்கள். ஆனால் சில காதல் திருமணங்கள் மட்டுமே இப்படி சாதிய பார்வையாலும், தங்கள் சாதியின் மாண்பைக் காக்க புறப்பட்ட சாதிய அரசியல்வாதிகளாலும் பிரச்சனையாக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட பிரச்சனைகள், தமிழினமும், தமிழ்நாடும் தன்னை எதிர்நோக்கியுள்ள பல்வேறு பெரும் சிக்கல்களுக்காக போராட ஒன்றுபட்டு நிற்க வேண்டிய அடிப்படையை தகர்த்து விடுகிறது.

இதனை தமிழின மக்கள் ஆழமாக புரிந்துகொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக இளைய சமுதாயம், நம் இனத்தின் ஒற்றுமையை பலவீனப்படுத்தும் சக்திகளை, அவைகளின் அரசியலை ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மை பிளக்கும் சாதிய சக்திகளையும், அவைகள் உருவாக்கும் கீழ்த்தரமான உணர்வுகளையும் புறந்தள்ளிட வேண்டும். இதனை செய்யத் தவறினால், தமிழனுக்கு என்று ஒரு அரசியலை உருவாக்கும் நமது முயற்சியும், நம் இனத்தின் விடுதலையும், உரிமை மீட்பும் கேள்விக்குறியாகிவிடும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

English summary
Naam tamilar chief Seeman told that Divya-Ilavarasan's love has become a tool in the hands of politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X