For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திடீர் தொடக்கம், அவசர முடக்கம்! இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைகள் தோற்க காரணம் என்ன?

By Veera Kumar
Google Oneindia Tamil News

Consistent inconsistencies in India-Pakistan relationship
டெல்லி: மத்தியில் எந்த அரசு வந்தாலும் முதல் கடமை, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்துவதுதான் என்பது சம்பிரதாயமாகிவிட்டது. அப்படியிருந்தும் இதுவரை ஒரு துரும்பு கூட அசைபடாமல் இருக்கிறதே ஏன்? இந்தியாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் வந்தார், நமது பிரதமர் பாகிஸ்தான் சென்றார். எல்லை வழியாக பஸ் விட்டார்கள், ரயில்விட போகிறார்கள் என்றெல்லாம் அவ்வப்போது செய்திகளில் படிக்கிறோமே, ஆனால் முடிவு மோசமானதும், ஏன் இப்படி கரடி விடுகிறார்கள் என்று நினைக்க தோன்றுகிறதே ஏன்?

இந்திய பாகிஸ்தான் பேச்சுவார்த்தை அடுத்தடுத்து தோல்வியில் முடிவடைய முக்கியமாக மூன்று காரணங்கள் உள்ளதாக சர்வதேச விவகாரங்களை கையாளும் பத்திரிகையாளர்கள் தெரிவிக்கிறார்கள். அதன் சாராம்சத்தை இனி பார்ப்போம்.

கார்கில் போர்

2001ம் ஆண்டு மே மாதம். கார்கில் போரில் 500க்கும் மேற்பட்ட இந்திய ராணுவ வீரர்கள், தங்கள் குருதியை உயிரோடு சேர்த்து தேசத்துக்காக அர்ப்பணித்திருந்து 2 ஆண்டுகள் கழிந்திருந்த நேரம் அது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவு செயலாளர் சோகிலா ஐயர், பாகிஸ்தானுடன் இனி பேச்சுவார்த்தை கிடையாது என்று கூறினார். இவர் இப்படி சொல்லி இரு மாதங்கள் ஆகவில்லை, அப்போதைய பிரதமர் வாஜ்பாய், பாகிஸ்தான் அதிபராக இருந்த முசாரப்புடன் ஜூலை மாதத்தில் ஆக்ராவில் உச்சிமாநாடு நடத்தினார்.

தலைவர்களின் சாப்பாடு

அந்த காலகட்டத்தில் இரு நாட்டு தலைவர்களும் எங்கு தங்குவார்கள், என்ன சாப்பிட போகிறார்கள் என்பதுதான் தொலைக்காட்சி செய்திகளில் பிரதான இடம் பிடித்திருந்ததே தவிர, பாகிஸ்தானின் அத்துமீறல் குறித்த செய்திகள் அடிபட்டு போயின. இதன்பிறகு மீண்டும் இரு நாடுகளும் நான் பெரியவரா, நீ பெரியவரா என்று ஆரம்பித்தன.

ஏணியும், பாம்பும்

திடீர் தொடக்கங்களும், எதிர்பாராத முடிவுகளும்தான் இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கான இலக்கணமாக மாறிப்போய்விட்டதை பல சம்பவங்கள் நினைவுபடுத்துகின்றன. 2006 ஜூலை மாதத்தில் மன்மோகன்சிங், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த கால அட்டவணை தயாரித்துக்கொண்டிருந்தபோது, மும்பை ரயில் குண்டுவெடிப்புகளால் பேச்சுவார்த்தை சிதைந்துபோனது. 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்தபோது மும்பையில் அடுத்தடுத்து நடந்த தாக்குதல்களால் சொல்லிக்கொள்ளாமல் அவர் தாயகம் திரும்பினார்.

பேச்சு நடக்கும்போது வேட்டு சத்தம்..

2007ம் ஆண்டு பிப்ரவரியில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் குர்ஷித் முகமது கசூரி, டெல்லி வந்தபோதுதான் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டு வெடித்தது. 2013 செப்டம்பரில் மன்மோகனும், ஷெரிப்பும் பேச்சு நடத்திய காலகட்டத்தில் ஜம்முவில் இந்திய ராணுவ முகாம் மீது தாக்குதல் அரங்கேறியது. அவ்வளவு ஏன், இவ்வாண்டு மே மாதம் மோடியும் ஷெரிப்பும் சந்தித்த போதுதானே, ஆப்கானிஸ்தானில் இந்திய துணை தூதரகம் மீது தாக்குதல் நடந்தது. இத்தனை பேச்சுவார்த்தைகளிலுமே முடிவு கோணலாகத்தான் இருந்துள்ளது.

முக்கியமான மூன்று காரணங்கள்

இந்தியா எப்போதெல்லாம் பேச்சுவார்த்தைக்கு முன்னெடுத்தாலும், அது தோல்வியிலேயே முடிகிறதே ஏன்? இதற்கெல்லாம், வேறு வழியில்லாமல், பாகிஸ்தான் பக்கம்தான் கை காண்பிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. பாகிஸ்தானின் மூன்று முக்கிய காரணிகள் இந்தியா-பாகிஸ்தான் நல்லுறவை தொடர்ந்து கெடுத்து வருகின்றன.

தீவிரவாதிகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும், அந்த நாட்டின் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்களிலும் செயல்படும் தீவிரவாத அமைப்புகள்தான் பேச்சுவார்த்தையை கலைப்பதில் முக்கிய மற்றும் முதல் பங்கை பெறுகின்றன. இந்த தீவிரவாத அமைப்புகள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தானுக்கே அச்சுறுத்தலாக இருப்பது கவனிக்க வேண்டியது. மேரியட் ஹோட்டல் வெடிகுண்டு தாக்குதல், விமானப்படை மற்றும் கடற்படை முகாம்கள் மீதான தாக்குதல் போன்றவை இந்த தீவிரவாத அமைப்புகளால் பாகிஸ்தானில் அரங்கேற்றப்பட்டவைதான்.

பாக்.ராணுவத்தின் தலையீடு

இந்தியாவுடன் நல்லுறவை பேணவிடாமல் செய்வதில் அடுத்த பங்கு பாகிஸ்தான் ராணுவத்துக்கு உள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான் அரசு நெருக்கம் காட்டும்போதெல்லாம், காஷ்மீர் எல்லையில், பாகிஸ்தான் ராணுவத்தின் துப்பாக்கிகளில் இருந்து குண்டுகள் கிளம்புகின்றன. "இது டெல்லிக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை கிடையாது; இஸ்லாமாபாத்துக்கு விடப்படும் எச்சரிக்கை" என்கின்றனர் சர்வதேச பார்வையாளர்கள். ஷெரிப்புக்கு எதிராக இம்ரான்கான் கடந்த வாரத்தில் நடத்திய முற்றுகை, அந்த நாட்டு ராணுவத்தின் கரங்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பதை வெளிச்சம்போட்டு காண்பித்தன.

ஆச்சரியம்.. ஆனால் உண்மை

நல்லுறவை கெடுக்க மூன்றாவது காரணம் ஒன்று உள்ளது. அது வேறு எதுவுமல்ல, அந்த நாட்டின் நீதித்துறை. 2008 ஆகஸ்ட் மாதம், அதிபர் முசாரப்பையும், 2012 ஜூனில் பிரதமர் யூசுப் ராஸா கிலானியையும் பதவியில் இருந்து அகற்றியதன் மூலம், தன்னை ஒரு சக்தி மிக்க அங்கமாக பாகிஸ்தான் நீதித்துறை பறைசாற்றியுள்ளது.

தேவையற்ற தாமதம்

மும்பை தாக்குதல் உள்ளிட்ட இந்தியா பாதிப்படைந்த எந்த பிரச்சினையாக இருந்தாலும், பாகிஸ்தான் நீதிமன்றங்கள் மெத்தனம் காண்பிக்கின்றன. கோர்ட்டுக்கு அதன் வேலையை பார்க்க யாரும் சொல்லி கொடுக்க தேவையில்லைதான், ஆனால், மும்பை தாக்குதல் குறித்த ஏகப்பட்ட ஆதாரங்களை சமர்ப்பித்தும், வழக்கு விசாரணை மந்தமாக நடைபெற காரணம் தெரியவில்லை. வழக்கை திரும்ப, திரும்ப ஒத்தி வைப்பது, நீதிபதிகளை பணியிடமாற்றம் செய்வது என பல்வேறு தடைகள் நீதித்துறையில் இருந்து கிளம்பியுள்ளன.

வேதாளமும், முருங்கை மரமும்

தீவிரவாதிகள், பாகிஸ்தான் ராணுவம், பாகிஸ்தான் நீதித்துறை ஆகியவை இணைந்து இந்தியாவுடனான பாகிஸ்தானின் நல்லுறவை கெடுத்து வந்தாலும், இந்தியா மீண்டும் மீண்டும், பேச்சுவார்த்தைக்காக, தரையிலிட்ட மீன் போல துடித்துக்கொண்டு இருக்க காரணம் ஒன்றுதான். "நமது நண்பர்களை நம்மால் தேர்வு செய்ய முடியும். ஆனால் அண்டை வீட்டாரை கிடையாது" என்ற ஒற்றைவாசகம்தான் இருநாடுகளுக்கு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைக்கு காரணம். வேதாளமும், முருங்கை மரமும், கதை கிடையாது, கண்முன் நடக்கும் உதாரணம் என்பதற்கு இவ்விரு நாடுகளின் உறவு ஒரு சாட்சி.

English summary
Surprise starts and abrupt endings are now the hallmark of the India-Pakistan dialogue process, with similar results each time
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X