For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வட மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக கற்பிக்க நடவடிக்கை! - உத்தர்கண்ட் எம்பி வலியுறுத்தல்

By Shankar
Google Oneindia Tamil News

டெல்லி: திருவள்ளுவர் தினத்தை இந்திய மொழிகள் தினமாக அறிவிக்க வேண்டும், வட மாநிலங்களில் தமிழை விருப்பப் பாடமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தர்கண்ட் எம்பி தருண் விஜய் நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் வியாழக்கிழமை முக்கிய பிரச்னைகளை அவையின் கவனத்துக்கு கொண்டு வரும் நேரத்தில், உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக உறுப்பினர் தருண் விஜய் பேச அனுமதிக்கப்பட்டார்.

Make Tamil as optional language in Northern states - Tarun Vijay MP

அப்போது அவர் பேசியதாவது:

"வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்திய மொழிகள் தனித் தன்மையும், சிறப்பு வாய்ந்தவையுமாகும். அந்த வகையில், வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தென் மாநிலங்களில் உள்ள ஏதேனும் ஒரு மொழியை விருப்ப மொழியாகக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.

உதாரணமாக, தமிழ் மொழியில் எழுதப்பட்ட தொல்காப்பியம் 5,000 ஆண்டுகளுக்கும் பழைமையானது. அதேபோல, சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, மணிமேகலை, வளையாபதி, குண்டலகேசி போன்றவை தமிழ் இலக்கியம் நமக்களித்த மாபெரும் காப்பியங்களாகும்.

தமிழ் இலக்கியத்தின் பெருமையை சந்தேகத்துக்கு இடமின்றி உலகுக்கு பறைசாற்றுவது கம்பரின் "ராமாயணம்' ஆகும். அதேபோல, இன்றைய காலகட்டத்துக்கும் உரித்தாகும் வகையில் அமைந்த சிறந்த படைப்பு, திருவள்ளுவரின் "திருக்குறள்' ஆகும். திருக்குறளின் சுவடுகள் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன.

நம் நாட்டில் சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் உலக அளவில் கொண்டிருந்த செல்வாக்கும், அவர்கள் சமூகத்துக்கு ஆற்றிய நற்சேவையும் நம்மில் எத்தனை பேருக்கு முழுமையாகத் தெரியும்? அசோகரும், விக்ரமாதித்யர் போன்ற மாபெரும் சக்கரவர்த்திகளும் மட்டும்தான் இந்தியா எனக் கருதிக் கொள்ளக் கூடாது. சோழர்கள், கிருஷ்ணதேவராயர், பாண்டியர்கள் போன்ற மரியாதைக்குரிய மன்னர்களையும் நமது வரலாறு கண்டுள்ளது.

அதேபோல, வங்கம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளுக்கும் பெருமைமிகு வரலாறுகள் உள்ளன.

இந்த நிலையில், இந்திய மொழிகளுக்கு எல்லாம் மரியாதை அளிக்கும் வகையில், திருவள்ளுவர் பிறந்த தினத்தை (தை 2) "இந்திய மொழிகள் தினம்" எனக் கடைப்பிக்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

அதேபோல, தேசிய ஒற்றுமையை உணர்த்திடும் வகையில் வட மாநிலங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தமிழை விருப்பப் பாடமாக மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்க வேண்டும்" என்று தருண் விஜய் குறிப்பிட்டார்.

அவரது பேச்சைக் கேட்ட அவையில் இருந்த அதிமுக, திமுக உறுப்பினர்கள் தருண் விஜய் அருகே வந்து வாழ்த்துகளும், நன்றியும் தெரிவித்தனர்.

தருண் விஜய் உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் பிறந்தவர். அடிப்படையில் பத்திரிகையாளராக 25 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு முழு நேர அரசியலுக்கு வந்தவர். 2010-இல் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

மாநிலங்களவையில் தமிழ் மொழிக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள்கூட இதுபோன்ற கோரிக்கையை இதுவரை முன்வைத்ததில்லை.

இந்த நிலையில், வட மாநிலத்தைச் சேர்ந்த உறுப்பினர் இத்தகைய கருத்தை வெளியிட்டிருப்பது ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் ஆச்சர்யத்திலும் நெகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

English summary
Uttarkhant MP Tarun Vijay urged the union govt to make Tamil as an optional language in North Indian states.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X